குழந்தைகளே காலை 7 மணிக்கு பள்ளி செல்லும்போது நீதிபதிகள் ஏன் 9 மணிக்கு பணிக்கு வரக்கூடாது : உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி..

பொதுவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வழக்கு விசாரணையை காலை 10.30க்கு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நாட்டின் நீதித்துறையின் உச்சபட்ச அமைப்பாக திகழ்வது டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது நீதிபதி என்வி ரமணா உள்ளார்.

இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவரைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் உள்ளவர் நீதிபதி யுயு லலித். நீதிபதி ரமணாவின் ஓய்வுக்குப்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி யுயு லலித் பொறுப்பேற்கும் பட்சத்தில் நவம்பர் 8ஆம் தேதி வரை அவர் தான் தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பார்.

பொதுவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வழக்கு விசாரணையை காலை 10.30க்கு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், நீதிபதி யுயு லலித், ரவீந்தர பட், சுதான்ஷு துலியா ஆகியோரின் அமர்வு ஒரு வழக்கு விசாரணையை காலை 9.30 மணிக்கே தொடங்கியது. வழக்கமான செயல் நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே நீதிபதிகளின் அமர்வு வழக்கு விசாரணையை நேற்று நடத்தியது. இது தொடர்பாக நீதிபதி லலித் கூறுகையில், காலை 9 மணிக்கெல்லாம் நீதிபதிகள் தங்கள் வழக்குகளை விசாரிக்க தொடங்கி விட வேண்டும் என்பதே எனது கருத்து. நமது குழந்தைகள் எல்லாம் காலை 7 மணிக்கே பள்ளிக்கு செல்கிறார்கள் என்ற போது, நம்மால் 9 மணிக்கு பணிக்கு வர முடியாதா என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், நீதிபதிகள் 9 மணிக்கு தங்கள் பணியை தொடங்கி, 11.30க்கு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு, தினசரி வழக்கு விசாரணையை 2 மணிக்கு முடிப்பது நலம். அப்போது தான் மாலை நேரத்தில் அடுத்த நாள் வழக்குகளை படித்து அதை விரைந்து முடிக்க தயாராக ஏதுவாக இருக்கும் என்றுள்ளார். நீதிபதியின் இந்த கருத்தை மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் வரவேற்றுள்ளார்.முன்னதாக சில வாரங்களுக்கு முன்னர் விழா ஒன்றில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு நாட்டின் நீதிமன்றங்களில கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது வேதனை அளிக்கிறது. சுமார் 5 கோடி வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இதை விரைந்து முடிக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.