பாலியல் புகாரில் பேராயர் ஃபிராங்கோ கைது: மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாக புகார்

கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் புகைப்படக் கலைஞர் ஒருவரை மிரட்டி ஃபிராங்கோவுக்கு எதிரான வாக்குமூலத்தைப் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜலந்தர் பேராயராக இருந்த ஃபிரான்கோ முல்லக்கல் கேரளாவுக்கு வந்த போது 2014 முதல் 2016 வரை தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி புகார் கூறியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் முலக்கல் திருப்புனித்துராவில் ((Tripunithura)) உள்ள கேரள குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் நேற்று முன் தினம் ஆஜரானார். அவரிடம் கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் அளித்த தகவல்களின் பேரில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் ஃபிரான்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே போலீசார் ஃப்ராங்கோ மூலக்கல்லுக்கு எதிராக வழக்கை ஜோடிக்க முயற்சி செய்வதாக கேரள எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ் குற்றம்சாட்டியுள்ளார். சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்துக்குப் பின்பு பேராயருடன் கன்னியாஸ்திரி மகிழ்ச்சியான முகபாவத்தில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதை விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அதனை போலீசார் ஆதாரமாக ஏற்கவேயில்லை என்று கூறியுள்ள அவர், விசாரணை அதிகாரிகளில் ஒருவர் புகைப்படக் கலைஞரை மிரட்டி முலக்கல்லுக்கு எதிராக வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

Bishop Franco Mullakkal Arrest