முக்கிய செய்திகள்

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.

அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றவியல் வழக்கு விவரங்களை

48 மணி நேரத்துக்குள் தங்களது இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தங்களின் இணையதளம், சமூக வலைத்தளங்கள், பிராந்திய நாளேடுகளில் குற்றப்பின்னணியை வெளியிட உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மேலும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து அரசியல் கட்சிகள் 72 மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும்

உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தெரிவிக்கவேண்டும் என்றும்,

செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக, குற்ற வழக்குகளை விளம்பரம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இதனை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என கூறி, தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஷ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எப்.நரிமன், எஸ்.ரவீந்திர பட் அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையிலான அமர்வு இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இவ்வழக்கின் விசாரணையின் போது,

குற்றப்பின்னணி அல்லது குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிற்க அரசியல் கட்சிகள் அனுமதித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வெற்றிபெறுவது மட்டுமே ஒரு வேட்பாளரின் திறன் ஆகிவிடாது என்பதை குறிப்பிட்டனர்.

மேலும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்றும் எம்பி, எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் வெளியிட வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

வேட்பாளர்களின் கிரிமினல் வழக்குகள் குறித்த விவரத்தை இணையத்தில் பதிவேற்றிய 72 மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அத்துடன் குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்த காரணங்களையும் வெற்றி வாய்ப்பை தாண்டி வாய்ப்பு தந்ததற்கான காரணத்தையும் கட்சிகள் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை கட்சிகள் பின்பற்றாத போது தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.