தலைமை நீதிபதி விவகாரம் : உச்சநீதிமன்றம் செல்கிறது காங்கிரஸ்


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கக் கோரும் நோட்டீஸை குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது 4 வகையான குற்றச்சாட்டுக்களைக்கூறி அவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவரக்கோரி குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட 6 கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. அதில் 64 எம்.பி.க்கள் கையொப்பம் இட்டிருந்தனர்.

இந்நிலையில், அந்தக் கடிதத்தை பரிசீலனை செய்தும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தும் மாநிலங்கள் அவைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, தலைமை நீதிபதியை பதவிநீக்கக் கோரும் தீர்மானம் என்பது சட்டவிரோதம், தவறானது, அரசியல்சாசனத்துக்கு விரோதமானது என்று கூறி நிராகரித்தார். தனது முடிவை ஏறக்குறைய 10 பக்கங்களில் வெங்கைய்ய நாயுடு தெரிவித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோர் டெல்லியில் ஊடகங்களுக்குப் இன்று பேட்டி அளித்தனர். அப்போது கபில் சிபல் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் நோட்டீஸை விசாரணைக்கு ஏற்கும் முன்பே அதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு நிராகரித்துள்ளார்.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறோம். மனுத்தாக்கல் செய்தபின், தலைமை நீதிபதி இந்த மனுவை விசாரிக்காமல் ஒதுங்கி இருப்பார் என்று நம்புகிறோம்.

64 எம்.பி.க்கள் கையொப்பம் இட்டுக் கொடுத்த மனுமீது நிதானமாக விசாரணை செய்யாமல் மாநிலங்கள் அவைத்தலைவர் மிக,மிகவிரைவாக முடிவு எடுத்துள்ளார். இந்த விஷயத்தில் அந்த அளவுக்கு விரைவாக முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இந்த மனுவை நிதானமாகப் பரிசீலனை செய்து, விவாதித்து முடிவு எடுக்க சாதாரணமாக ஒருவருக்கு அதிகமான காலநேரம் எடுக்கும். ஒரு அனுபவமான வழக்கறிஞர் என்ற அடிப்படையில், நாங்கள் கொடுத்த நோட்டீஸ் மீது தெளிவான முடிவு எடுக்க அதிக காலம் ஆகும். நான் ஒன்று வானத்தில் இருந்து இறங்கி வரவில்லை.

இந்த வழக்கை வாதத்துக்கு எடுக்கும் முன், இது குறித்து சட்டரீதியாக விவாதிக்கவே நீண்டநாட்கள் தேவைப்படும். உண்மைகளை உணரவேண்டும்,அதன் மீது ஆய்வு செய்ய வேண்டும். அதற்கும் நேரம் ஆகும்.

ஆனால், நாங்கள் அளித்த மனுவை மிகவிரைவாக நிராகரிக்க ஏதேனும் நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. நாங்கள் மனுவில் வைக்கும் குற்றச்சாட்டை நாங்கள் மட்டும் கூறவில்லை, உச்ச நீதிமன்றத்தின் 4 நீதிபதிகளும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். ஆதலால் கொலிஜியத்திடம் ஆலோசனை நடத்திவிட்டு இந்த முடிவை வெங்கைய்ய நாயுடு எடுத்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதி மீது நாங்கள் கூறிய தவறான நடத்த எனும் குற்றச்சாட்டை விசாரிக்காமல் எப்படி ஆதாரமற்றது என்று வெங்கைய்ய நாயுடு கூறுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிக்கல் ஆரம்பம்

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வெங்கைய்ய நாயுடுவின் முடிவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் மனுவை நீதிபதிகளுக்கு ஒதுக்க வேண்டும். தன்மீதான குற்றச்சாட்டு கொண்ட மனுவை தலைமை நீதிபதி எப்படி மற்ற நீதிபதிகளுக்கு எவ்வாறு ஒதுக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

இதனால், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் அதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்குமா அல்லது மனுவை விசாரிப்பதில் இருந்து தீபக் மிஸ்ரா ஒதுங்கிக்கொள்வாரா என்ற கேள்வியும், அவ்வாறு விசாரித்தால், தன்மீதான குற்றச்சாட்டு குறித்த மனுவை தானே ஒதுக்கி, விசாரிக்க முடியும் என்ற சிக்கலும், சர்ச்சையும் எழும்.