சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்க : பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தல்.

ராணுவ வீரர்களின் உயர்தியாகம் வீணாகி விடக்கூடாது; சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்க; என்று பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு நாட்டு எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.

இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர்.

இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என கூறப்படுகிறது.

45 ஆண்டுக்குப் பிறகு இந்தியா – சீனா ராணுவம் இடையேயான மோதலில் உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.

தொடர்ந்து, பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்.

இதில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, சீனாவின் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முயறியடிக்கப்பட்டுள்ளது.

ஊடுருவல் முயற்சியை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்து தடுத்தனர் என கூறினார். எல்லைக்கோட்டை தாண்டி உட்புக முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மோடி பேசினார்.

இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில்,

நமது பகுதிகளை சட்ட விரோதமாக சீனா சொந்தம் கொண்டாடுகிறது. சீனாவின் மிரட்டல்களுக்கு நாம் அஞ்சக்கூடாது.

ராணுவ வீரர்களின் உயர்தியாகம் வீணாகிவிட அனுமதிக்க கூடாது. ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நீதி கிடைக்காவிடில் அது வரலாற்று அநீதியாக மாறிவிடும்.

சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது

அவசியம். சீனா தாக்குதல் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.