பாஜகவில் சேர்ந்தார்… பாதுகாப்பையும் பெற்றார்… முகுல்ராய்!

இடது பக்கம் முகம் மலர சிரித்துக் கொண்டிருக்கும் முகுல்ராய், நடுவில் ரவிசங்கர் பிரசாத்

முகுல்ராய்… மம்தா பாணர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில், அவருக்கு அடுத்த இரண்டாவது தலைவராக இருந்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ரயில்வே அமைச்சராகவும் வலம்வந்தவர். பாஜக காலூன்ற முடியாத மாநிலங்களில் எல்லாம், தங்களுக்கு ஏதுவான ஆட்களை விலைக்கு வாங்கி வலைக்குள் போட்டு வருகிறது. அத்தகைய ஆள்பிடிக்கும் ஆபரேஷனின் ஒரு பகுதியாகத்தான், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசின் முக்கியத் தலைவராக இருந்த முகுல்ராயை தன் பக்கம் இழுத்துள்ளது பாஜக. ரவிசங்கரைச் சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட முகுல்ராய் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் விடுக்க தவறவில்லை. ஆம்… பாஜக மதவாதக் கட்சியில்லை… அது ஒரு மதச்சார்பற்ற கட்சி என்ற தனது கண்டுபிடிப்பையும் அவர் அறிவித்துள்ளார். இதற்குப் பரிசாக அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்நேரமும் 11 பாதுகாவலர்கள் புடைசூழ அவர் வலம் வரலாம். விஐபி கலாச்சாரத்தை ஒழிக்கப் போவதாக கூறி வரும் பாஜக அரசில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட பாதுகாப்பு அளிக்கப்படும் விஐபிக்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது என்டிடிவி செய்தி. அதாவது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அளிக்கப்படும் விஐபிக்களின் எண்ணிக்கை 350 ஆக இருந்த நிலையில், தற்போது 475 ஆக அதிகரித்திருப்பதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது. முகுல் ராயைப் பொறுத்தவரை அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மேற்கு வங்கம் செல்லும் போதெல்லாம் அவருக்கு பாதுகாப்பளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.