பிரிட்டனில் இறந்து போன மகனின் விந்தணுக்கள் மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுத்த தம்பதி…


பிரிட்டனைச் சேர்ந்த ஒரு வயதான தம்பதி, இறந்துபோன தங்கள் மகனின் விந்தணுக்களை பயன்படுத்தி, வாடகைத்தாய் மூலம் பேரக்குழந்தை பெற்றெடுத்த ஆச்சரியமூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த வயதான தம்பதியின் ஒரே மகன், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

மகனின் இழப்பால் சோகத்தில் தவித்த அந்த தம்பதி, இனி தங்களால் பாட்டி, தாத்தாவாக முடியாது என்று ஏங்கி தவித்தனர்.

இந்நிலையில், கரு முட்டைகள் மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் நவீன சிகிச்சைமுறை குறித்து அறிந்த அந்த தம்பதிகள், தங்கள் மகனை அடக்கம் செய்வதற்கு முன்பாக அவனது விந்தணுக்களை எடுத்து பதப்படுத்த முடிவு செய்தனர்.

அதன்படி, சிறுநீரகவியல் நிபுணர் ஒருவர் மூலம், விந்தணு எடுக்கப்பட்டு, உறைநிலையில் பதப்படுத்தப்பட்டது.
ஆனால் பிரிட்டனில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது சட்டவிரோதம் என்பதால், விந்தணுவை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கருத்தரித்தல் மையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு விந்து செல்களுடன் தானமாக பெறப்பட்ட கருமுட்டைகளை சேர்த்து, ஆய்வகத்தில் கரு வளர்க்கப்பட்டு வாடகைத் தாய் மூலம் கடந்த 2015ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். பின்னர் அந்த குழந்தையின் சட்டப்பூர்வ பெற்றோராக தங்களை அறிவித்த தம்பதிகள், அதன்பிறகு தங்களது பேரக்குழந்தையுடன் பிரிட்டன் திரும்பினர்.

பிரிட்டனில் வசிக்கும் அந்த குழந்தைக்கு, தற்போது மூன்று வயதாகிறது. ஆனால் அதேநேரம் சட்டத்திற்கு புறம்பாக உருவாக்கிய பேரக்குழந்தையை பிரிட்டனில் வளர்ப்பதற்கு சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளாது.

எனினும் மனதை தளரவிடாத இந்த வயதான தம்பதிகள், இறந்துபோன தங்கள் மகனின் விந்தணுக்களை பயன்படுத்தி, வாடகைத்தாய் மூலம் பேரக்குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.