முக்கிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்ம மரணம்


டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்எஸ் படித்த வந்த திருப்பூர் மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு என்பவர் எம்எஸ் படித்து வந்தார். அங்கு, இன்று காலை அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை பார்த்த சக மாணவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனையில் 2016ம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் சரவணனும் மர்மமான முறையில் மரணமடைந்தார். மதுரையில் எம்பிபிஎஸ் முடித்த பின், எய்ம்ஸ் மருத்துவமனையில், எம்டி பொது மருத்துவ படிப்பில், சேர்ந்த அவர், தன் அறையில் இறந்து கிடந்தார். சரவணன் தற்கொலை செய்யவில்லை, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்ற புகார் எழுந்தது.

பின்னர் அவர் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இதையடுத்து, சரவணன் மரணமடைந்த வழக்கு கொலை வழக்கமாக பதிவு செய்யப்பட்டது.

இதேபோல், சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வந்த, திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரிராஜ் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக கூறி தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.