தர்மபுரி மாணவி பாலியல் வன்கொடுமையால் உயிரிழப்பு : கயவர்களை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்..

தர்மபுரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மனிதம் வக்கிரம் அடைந்து வருவது வேதனை அளிக்கிறது என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதற்கு காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்த அண்ணாமலை (43), இவரது மனைவி மலர்(40). இவர்களது மகள் சவுமியா(17), இவர் விடுதியில் தங்கி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

தீபாவளி பண்டிகைக்காக கடந்த 5-ம் தேதி சொந்த ஊருக்கு வந்த மாணவி, அன்று மாலை 5 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்றார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகிய இருவரும், மாணவியை பின் தொடர்ந்து சென்று, அவரது கை, கால்களை கட்டியும், வாயில் துணியை வைத்தும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடினர்.

பின்னர், கட்டை அவிழ்த்துக் கொண்டு வீடு திரும்பிய மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி பெற்றோரிடம் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை கடந்த 7-ம் தேதி, தொப்பூர் குறிஞ்சி நகர் வள்ளலார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தற்காலிகமாக தங்க வைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவி சவுமியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று காலை 11 மணியளவில், சிகிச்சை பலனின்றி சவுமியா உயிரிழந்தார். தகவல் அறிந்த சிட்லிங் மலைகிராம மக்கள் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

சவுமியாவை பாலியல் பலாத்காரம் செய்த இருவரையும் கைது செய்யும் வரை, சடலத்தை வாங்க மாட்டோம் என அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாணவி சவுமியாவின் தாய் மலர் கூறுகையில், ‘திடீரென சவுமியா இறந்தது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. என் மகளை கொன்ற ரமேஷ், சதீஷ் இருவரையும் கைது செய்யும் வரை, அவளது சடலத்தை வாங்க மாட்டோம்,’ என்றார்.

இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழக்க காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என பல்வேரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.