தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு : கூவத்தூர் ஆன குற்றாலம்..

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வர உள்ள நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் குற்றாலத்தில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி சத்யநாராயணா, தீர்ப்பை ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேருடனும் தினகரன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை, குற்றாலத்தில் தங்கியிருக்க தினகரன் அறிவுறுத்தினார்.

அதன்படி, தங்க தமிழ்செல்வன் தலைமையில், 7 பேர் நேற்றிரவு, தென்காசி அருகே பழைய குற்றாலத்தில் உள்ள இசக்கி ஹைவியூ ரிசார்டுக்கு வந்து சேர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மற்றவர்கள் அனைவரும் அடுத்தடுத்து வந்துசேர்ந்தனர். முன்னாள் அமைச்சரும், தினகரன் ஆதரவாளருமான இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான இந்த ரிசார்டில் வேறு யாரும் தங்கவில்லை.

10 நாட்களுக்கு இவர்கள் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த ரிசார்டில் எம்.எல்.ஏக்களின் தேவைகளுக்காக கூடுதல் ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தீர்ப்பைத் தொடர்ந்து, ஆதரவாளர்களை கட்டுக்குள் வைத்திருக்கவும், முதலமைச்சர் பக்கம் சேர்வதைத் தடுக்கும் வகையிலும், இந்த நடவடிக்கையை தினகரன் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது