திமுக கூட்டணியில் மா.கம்யூ கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு..

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிகவுக்கு தலா 2,

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொகுதிப்பங்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- திமுக இடையே இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது.

இதனையடுத்து மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-மார்க்சிஸ்ட் இடையேயான உடன்பாடு கையெழுத்தானது.

அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், சட்டமன்ற இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் திமுகவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கும்.

மக்களவை தேர்தலுக்காக 40 தொகுதிகளிலும் திமுகவுடன் இணைந்து வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் என்னென்ன என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது நோக்கம் என அவர் கூறினார்.

தொகுதி பங்கீடு விவரம்
காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 19 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.

மேலும் மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இன்று தொகுதிப்பங்கீடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.