முக்கிய செய்திகள்

அரியாணாவில் திடீர் திருப்பம்: காங்கிரசுடன் மாயாவதி கைகோர்ப்பு?..

அரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா நேற்று மாயாவதியை ரகசியமாகச் சந்தித்துப் பேசினார்.

அரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து அங்கு அக்டோபர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தங்களைச் செய்து வருகிறது.

இந்தத் தேர்தலில், கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக, பகுஜன் சமாஜ் மற்றும் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி, கடந்த மாதம் அறிவித்து இருந்தன.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 40 தொகுதிகளை ஒதுக்க துஷ்யந்த் முடிவு செய்தார்.

ஆனால், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டது. அதையடுத்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும்,

அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாகவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அதிரடியாக அறிவித்தார்.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியாணா மாநில முன்னாள் முதல்வருமான பூபேந்தர் சிங் ஹூடா நேற்று டெல்லியில் மாயாவதியை ரகசியமாகச் சந்தித்துப் பேசினார்.

அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் செல்ஜாவும் உடன் சென்றார். இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் தொகுதிப் பங்கீடு முடிந்தால் மட்டுமே கூட்டணி உறுதியாகும் எனத் தெரிகிறது.