இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்.

இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் பரிந்துரைத்துக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

கனிமொழி:

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, இந்தி திணிப்பை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என்றார்.

கமல்ஹாசன்:

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மொழித்திணிப்பை ஏற்க மாட்டோம் என்பதை தமிழர்கள் ஏற்கெனவே அழுத்தமாகப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

வைகோ:

புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியைத் திணிக்க மத்திய அரசு திட்டமிடுவதாகக் குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மொழிப்போர் மீண்டும் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்துள்ள 484 பக்க தேசிய கல்விக் கொள்கையில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும்,

அதற்காக மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது டிவிட்டர் பதிவில்

8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைத் திணிக்கும் இம்முயற்சி நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும்.

இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும். எனவே இத்திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் .