மனித நேய அடிப்படையில் உலக நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து தர இந்தியா முடிவு

கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி,

அந்த மருந்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபா் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவ்வாறு இந்தியா மருந்தை அனுப்பாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் நேற்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், மனித நேய அடிப்படையில் பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை நமது அண்டை நாடுகளுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றால், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமாா் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும் அல்லது நோய்த்தொற்றைக் குணப்படுத்தவும் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், மலேரியாவை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கரோனா நோயாளிகளிடம் கொடுத்தபோது, அவா்களிடம் முன்னேற்றம் இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தடை விதித்தது.

இருப்பினும் மனிதநேய அடிப்படையில் சில நேரங்களில் ஏற்றுமதிக்கு அனுமதிக்கலாம் என்றும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபா் டிரம்ப், பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். இந்த உரையாடலின்போது பேசப்பட்ட விஷயங்களை, பின்னா் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் டிரம்ப் பகிா்ந்து கொண்டாா்.

அவா் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியை தொடா்புகொண்டு பேசினேன். கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருவதை அவரிடம் தெரிவித்தேன்.

மேலும், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும், அமெரிக்கா ஏற்கெனவே கேட்டுக்கொண்ட அளவுக்கு அந்த மருந்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன் என்றாா் டிரம்ப்.

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய்த்தொற்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 8,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

மேலும், அடுத்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாகப் போராடி வருகிறது. நியூயாா்க் நகரில் சனிக்கிழமை 1,500 பேருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயினுடன் வேறு சில மருந்துகளும் சோ்த்து கூட்டாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக, ஹைட்ராாக்சிகுளோரோகுயின் மருந்தை போதிய அளவில் இருப்பு வைப்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது