இந்தியா்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிப்பு…

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 10 ஆண்டுகளுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘லான்செட்’ என்ற ஆங்கில மருத்துவ இதழில் இந்தியர்களின் ஆயுட்காலம் குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “இந்தியா்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 1990ஆம் ஆண்டில் இருந்ததைவிட 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளது.

“1990ல் இந்தியா்களின் சராசரி ஆயுள் 59.6 ஆண்டுகளாக இருந்தது. இது, கடந்த 2019ஆம் ஆண்டில் 70.8 வயதாக கூடியுள்ளது.

“அதேவேளையில், இந்த சராசரி ஆயுள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதையும் காணமுடிகிறது.

“அதிக அளவாக கேரள மாநில மக்களின் சராசரி ஆயுள் 77.8 ஆகவும் ஆகக் குறைந்த அளவாக உத்தரப்பிரதேச மாநில மக்களின் சராசரி ஆயுள் 66.9 ஆண்டுகளாகவும் இருக்கிறது.

“இருப்பினும், மிக அதிகமானவா்கள் நோயுடனும் உடல் குறைபாட்டுடனும் அதிக நாள் வாழ்வதால் இந்த முன்னேற்றத்தை மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதமுடியாது,” என்றும் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனர்.

உலகத்தில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் நீரிழிவு போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன.

இந்தியா மட்டுமின்றி உலகின் மற்ற நாடுகளிலும் சராசரி ஆயுள் அதிகரித்து வருவதாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் நீரிழிவு, இதய பாதிப்பு, பக்கவாதம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காற்று மாசு, புகையிலை பழக்கம், மோசமான உணவுப் பழக்கம் ஆகியவற்றால்தான் கடந்த 30 ஆண்டுகளில் அதிகம் பேர் இறந்துள்ளனர் என்றும் ஆய்வு விவரம் தெரிவித்துள்ளது.