முக்கிய செய்திகள்

அம்மா கையால் ஊட்ட உகந்ததா பாக்கெட் பால்? – கி.கோபிநாத்

மனிதனின் நற்பண்பை, ஒளவையாரும், திருவள்ளுவரும் பாலின் தூய்மையோடு ஒப்பிட்டனர்.

கி. கோபிநாத், பத்திரிகையாளர்

மனிதம் மரித்து வரும் நிலையில், பாலும் அதன் இயல்பை இழந்துவருகிறது. அடுத்த இனத்தின் பாலை அருந்தும் ஒரே இனம் மனித இனம்தான். ‘கறந்த பால் மடி புகா’ என்று முன்னோர் கூறினார்கள். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் மாடுகளின் மடியிலிருந்து விஷத்தையே கறக்க வைத்துவிட்டனர் சமூகத்திற்கு எதிரான ஆராய்ச்சியாளர்கள்.

பசும்பாலை மருந்து என்றுதான் ஆயுர்வேதம் வகைப்படுத்துகிறது. பால் சூடாகி குமிழ்கள் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள சத்துகள் முழுமையாகக் கிடைக்கும் என்பது பரவலான கருத்து. சுத்தமான பசும்பாலில் தண்ணீர் அதிகம் இருக்கும். அதாவது 87 சதவிகிதம் நீர், 4 சதவிகிதம் கொழுப்பு, 9 சதவிகிதம் புரதம், லாக்டோஸ், வைட்டமின்கள் A, D மற்றும் இன்னபிற சத்துகள் உள்ளன. கறந்த பாலில் உள்ள கொழுப்பானது வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான செல்களை ஊக்குவிப்பதுடன், இரைப்பை தொற்றை எதிர்த்துப் போராடும். கறந்த பாலில் இயற்கைக்கு நெருக்கமான நல்ல பாக்டீரியாக்கள், ஜீரணத்துக்கு உதவும் ப்ரோபயாடிக்ஸ்-கள் உள்ளன. பாலின் நிறைவுற்ற கொழுப்பானது (Saturated Fat) கால்சியத்தை உறிஞ்சி எலும்புகளை வலுவாக்கும்.

எனவே பால் தண்ணியா இருக்கு என முகம் சுளிக்காமல், பசும்பாலை வாங்கி அருந்துங்கள். கறந்த பசும்பாலை அதிகபட்சமாக 100 டிகிரி சென்டிகிரேட் வரை காய்ச்சி, பின்னர் குளிரூட்டுவதுதான் பதப்படுத்தப்பட்ட பால். அதாவது பாக்கெட் பால். பதப்படுத்துதலின் படிநிலைகள், பின்னர் சேர்க்கப்படும் ரசாயனங்களை அணுகுண்டோடு ஒப்பிடலாம். கறக்கப்பட்ட பால் அதிகபட்சம் 5 மணி நேரத்தில் கெட்டுவிடும். அதில் இயற்கையாக உள்ள சத்துகளை நீக்கி, செயற்கை சத்துகளுடன் சில வேதிப்பொருளை சேர்த்து, பால் கெடாமல் அதன் தன்மையை இருத்தி வைப்பதுதான் பதப்படுத்துதல். இது இயற்கைக்கு முரணானது.

பதப்படுத்தும்போது பாலில் உள்ள நல்ல கொழுப்பு நீக்கப்படுகிறது. அதனோடு வைட்டமின்கள், என்சைம்கள், செரிமானத்துக்கான பாக்டீரியா மற்றும் ஊட்டச் சத்துகளும் காணாமல் போய்விடும். பின்னர் பாலோடு செயற்கையான வைட்டமின்களை சேர்க்கும்போது நமது உடல் அதை அங்கீகரிக்காது.  

பால் கெடாமல் இருக்க அமோனியா, சோடியம் ஹைட்ராக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராசைடு ஆகியவற்றில் ஒன்று கலக்கப்படுவதாக பரவலாக புகார் உண்டு. அத்துடன் பால் கெட்டியாக வெள்ளை நிறத்தில் இருக்க யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் பவுடர், மரவள்ளி மாவு, ஜவ்வரிசி போன்றவற்றை கலப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் 68 சதவிகிதம் பாலில் கலப்படம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் வரும் நோய்களின் பட்டியல் நீளம். அலர்ஜி, ஆஸ்துமா, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, இருதயப் பிரச்னைகள், நீரிழிவு, எலும்பு பலவீனமடைதல், பாலியல் கோளாறு, ரத்த சோகை, சிறுநீரக பாதிப்பு என அடுக்கிக்கொண்டே போகின்றனர் நிபுணர்கள்.

பாலில் லேக்டோஸ் எனும் சர்க்கரை சத்து உள்ளது. (நீரிழிவு நோய் மற்றும் உடல்பருமன் உள்ளவர்கள் பாலை தவிர்க்க வேண்டும் என சொல்வது இதனால்தான்) அது சிறுகுடலுக்கு செல்லும்போது அங்கிருக்கும் லேக்டேஸ் எனும் நொதிப்பொருள் அதை குளுக்கோஸ் மற்றும் கேலெக்டோஸாக பிரிக்கிறது. இதுசரிவர நடக்காத போது ஏற்படும் பாதிப்பை Lactose Intolerance என்கிறது மருத்துவ உலகம். அதாவது பாலில் உள்ள லாக்டோஸை முழுவதுமாக செரிக்கவைக்க இயலாதபோது, குமட்டல், வாந்தி, டயரியா, வயிறு உப்புசம், வாயு பிரியாதது, அடி வயிற்றில் வலி போன்றவை ஏற்படும்.

குறிப்பிட்ட அளவு லேக்டோஸை உற்பத்தி செய்யும் திறன் மனித உடலுக்கு உள்ளது. பதப்படுத்தும்போது ஊட்டசத்துகள் அழிந்து பால் மலட்டுத்தன்மை பெறுகிறது. எனவே இதனை செரிக்க உடல் உற்பத்தி செய்யும் லேக்டோஸ் போதுமானதாக இருக்காது என்பதால்தான் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. பாலை பதப்படுத்தும்போது அதில் உள்ள சுரப்பிகளும் அழிந்துவிடுகின்றன. சுரப்பிதானே என இதை ஒதுக்கிவிட முடியாது, இந்தச் சுரப்பி, உடல் வளர்ச்சி, லேக்டேஸ் செயல்பாடு, ஊட்டம் மிகுந்த என்சைம்களை தூண்டுவது, ஜீரண உறுப்பில் பால் மற்றும் இதர பொருட்களை செரிக்கச் செய்வது என பல வேலைகளை செய்கிறது.

ஆவின், அமுல் போன்ற நிறுவனங்கள் உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள் என்பதை நம்பலாம். தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தம் ஆவின் பால் வகைகளைப் பற்றி பார்ப்போம். சமன்படுத்தப்பட்ட பால் (Pasteurized Toned Milk – Blue Packet) எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது என்பதால், வயதானவர்கள், குழந்தைகள் அருந்தலாம். நிலைபடுத்தப்பட்ட பாலில் (Pasteurized Standardised Milk – Green Packet) கொழுப்பு சற்று அதிகம். இது இளைய தலைமுறையினருக்கு மட்டுமே ஏற்றது. அடுத்து கொழுப்பு சத்து நிறைந்த பால் (Pasteurized Cream Milk – Orange Packet). இதை இனிப்புகள் செய்ய மட்டுமே பயன்படுத்தலாம். நான்காவது வகையான இருமுறை சமன்படுததப்பட்ட பால் (Pasteurized Double Tonned Milk – Pink Packet). இதில் கொழுப்பு குறைவு. 50 வயதுக்கு மேற்பட்டவர்களும், உடல் பருமன் உள்ளவர்களும் கூட அருந்தலாம்.

ஆனாலும் இயற்கையான சத்துகளை அழித்து, செயற்கையான சத்துகளை சேர்த்து, அதன் இயல்பை இழக்கச் செய்து, மலடாக மாறிய பதப்படுத்தப்பட்ட பாலை தொடர்ந்து அருந்துவோர் ஆரோக்கிய குறைபாடுகளை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை. எனவேதான் பதப்படுத்தப்பட்ட பால் ஆரோக்கியத்துக்கு பேரழிவு என வர்ணிக்கப்படுகிறது. பசும் பால் கிடைக்கவில்லை, கால்சியம் குறைபாடுக்கு பால் குடித்தே ஆக வேண்டும் என்றால், பதப்படுத்தப்பட்ட பாலை தவிர்த்து கீரை வகைகளை அதிகம் சாப்பிடுங்கள். பாலை விட கீரை வகைகள், பாதாம், அத்திப்பழம், சில வகை மீன்கள், இறால் உள்ளிட்டவைகளில் கால்சியம் அதிகம் கிடைக்கும்.

2 வயதுவரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதற்கு அடுத்த ஓராண்டு கறந்த பசும்பால் கொடுக்கலாம். அதன் பிறகு குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரியவர்களும் அருந்த வேண்டிய கட்டாயம் இல்லை. தற்போதோ, அழகு கெட்டுவிடும் என சுயநலமாக சிந்திக்கும் 95 சதவிகித தாய்மார்கள், ஒரு சில மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர். பின்னர் புட்டிப்பாலை அதாவது பதப்படுத்தப்பட்ட பால், பால் பவுடர் என வலிந்து திணிக்கின்றனர். அதுபோன்ற குழந்தைகள் வளர வளர எப்படி ஆரோக்கியமாக இருக்கும்? நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கடந்த இரண்டு தலைமுறை குழந்தைகள் பிணியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். இனி வரும் தலைமுறைகளாவது விழிப்புணர்வு பெற்று ஆரோக்கியமாக வாழட்டும்.

Is Pasteurized Milk Correct Food For Babies?