ஜெ., அப்பல்லோவில் இருந்தபோது 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியது எப்படி?

இந்திய வைரச்சந்தை பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென விற்பனைக்கு வந்துள்ளதால்,

வைரத்தின் மதிப்பு சரசரவென சரிவை சந்தித்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 சதவிகித விலை சரிவு. இந்த விலை சரிவு ஹாங்காங் உள்ளிட்ட உலக வைர சந்தையிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

திடீரென இவ்வளவு அதிகமான மதிப்புள்ள வைரம் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது எப்படி என்பதை ஆராய்ந்தால் அது, ஜெயலலிதாவிடம் வந்து முடிகிறது.

இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு,

ஜெயலலிதா 2 லட்சம் கேரட் வைரத்தை, மும்பை வைரச் சந்தையில் இருந்து வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது இந்திய வைரச்சந்தையில் திடீரென விற்பனைக்கு வந்திருக்கும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்தே வந்துள்ளது எனக் குறிப்பிடும் அந்த செய்தி,

அப்போது ஜெயலலிதா வாங்கிய வைரமே தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் செய்தி, எவ்வளவு மதிப்புக்கு வைரைம் வாங்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை,

அப்போது வாங்கப்பட்டது ’+11’ எனப்படும் நகைகளில் பயன்படுத்தப்படும் வைரம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது திடீரென சந்தையில் விற்பனைக்கு வந்திருப்பதும் இந்த வகையைச் சேர்ந்த வைரம்தான்.
இந்திய வைர தொழிலின் தலைமையகமாக செயல்படுவது குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம்.

சூரத் வைர கூட்டமைப்பின் (Surat Diamond Association – SDA) தலைவர் பாபு குஜராத்தி இதுபற்றிக் கூறும்போது,

‘’பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை வைரமாக வாங்கி வைத்துக்கொண்டார்கள்.

இப்படித்தான், தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய அரசியல்வாதிகள் 2 லட்சம் கேரட் வைரத்தை வாங்கினார்கள்.

தற்போது அந்த வைரங்களை மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதால், வைரச் சந்தையும், இதன் வணிகமும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது என்பது உண்மை” என பேட்டி கொடுத்திருக்கிறார்.
இந்த வைர கொள்முதல் மற்றும் விற்பனையில் சந்தேகத்துக்கு உரிய பல மர்மக் கேள்விகள் முளைக்கின்றன.
01. 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்பாக பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட வைரம் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், பண மதிப்பு நீக்கம் குறித்து ஜெயலலிதா முன்கூட்டியே அறிந்திருந்தது எப்படி?
02. ஜெயலலிதாவால் இந்த வைரம் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தொகை முழுவதும் கறுப்புப் பணம் என்பது உறுதியாகிறது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
03. 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரவே இல்லை. அப்படியானால், 2016 நவம்பர் 8-ல் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னால் ஜெயலலிதா, இத்தனை பிரமாண்ட மதிப்பில் வைரம் வாங்கியது எப்படி?
04. ஜெயலலிதா படுத்தப் படுக்கையாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது அவர் 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியதாக சொல்வது நம்பும்படியாக இருக்கிறதா?
05. அப்படியானால், ஜெயலலிதாவின் பெயரால் வாங்கப்பட்டுள்ள இந்த வைரத்தை உண்மையில் வாங்கியது யார்? யாருக்காக அந்த வைரம் வாங்கப்பட்டது?
06. ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலத்தில் அவர்தான் முதலமைச்சராக இருந்தார். ஒரு முதலமைச்சர் இத்தனை பிரமாண்டமான மதிப்பில் வைரம் வாங்கியிருக்கிறார் என்றால், அதற்கான கணக்கு என்ன? எங்கிருந்து வந்தது அந்தப் பணம்?
07. ஜெயலலிதாவுக்கே தெரியாமல் அவரிடம் கையெழுத்து பெற்று அல்லது அவருடைய கையெழுத்தை வேறு யாரேனும் போட்டு, இந்த வைரம் வாங்கப்பட்டுள்ளது என்றால், ஒரு முதலமைச்சரின் கையெழுத்தை போலியாக இட்டது மாபெரும் குற்றம் அல்லவா?
08. ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட அந்த வைரத்தின் தற்போதைய உரிமையாளர் அல்லது பாதுகாவலர் யார்? தற்போது அந்த வைரத்தை விற்பனை செய்பவர்கள் யார்?
09. அப்போது ஜெயலலிதாவின் பாதுகாவலராக உடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய உறவினர் வலைப்பின்னலுக்கு இந்த வைரம் வாங்குவது குறித்து தெரியுமா? அவர்களின் பங்கு என்ன?
10. அப்போது செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக இருந்தவர்களும், நாள்தோறும் அப்பல்லோ சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்து ஊடகங்களிடம் பேசியவர்களுமான எடப்பாடி பழனிச்சாமி, ஓ,பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு இதில் உள்ள பங்கு என்ன?
இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்தபோது அவருடைய பெயரை பயன்படுத்தி,

பெரும் தொகையிலான கறுப்புப் பணம், வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது.

நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கறுப்புப் பண ஊழல் இதன்பின்னே மறைந்திருக்கிறது. பா.ஜ.க.வுக்கு ரஃபேல் ஊழல் என்றால், அ.தி.மு.க.வுக்கு வைர ஊழல்!

நன்றி
கலைஞர் செய்திகள்