ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து;

வரும் ஜூன் 30-ம் தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ், மெயில், புறநகர் என அனைத்துப் பயணிகள் ரயில்கள் டிக்கெட் முன்பதிவையும் ரத்து செய்து ரயில்வே வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ரயில்வே சேவை தொடங்காத நிலையில் கடந்த 12-ம் தேதி முதல் டெல்லியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
புதுடெல்லியிலிருந்து இயக்கப்படும் 15 ரயில்கள், திப்ரூகார்க், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை, அகமதாபாத், ஜம்மு தாவி ஆகிய நகரங்களுக்குச் செல்கின்றன.

அனைத்துப் பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டு, குறைந்த அளவு நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும்.

ராஜ்தானி ரயில் கட்டணத்துக்கு இணையாக இருக்கும். ஏசி 3 அடுக்குப் படுக்கையில் 52 பயணிகளும், 2-ம் வகுப்பில் 48 பயணிகளும் மட்டுமே சமூக விலகலைக் கடைப்பிடித்துப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயில்களில் பயணிகள் டிக்கெட் கட்டணம் ராஜ்தானி ரயில் கட்டணத்துக்கு இணையாக இருக்கும்.
இதற்கிடையே, வரும் 22-ம் தேதி முதல் அதிகமான அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிறப்பு ரயில்களில் ஏசி மூன்றடுக்கிற்கு காத்திருப்பு 100 டிக்கெட்கள் வரையிலும், 2-ம் வகுப்பு ஏசிக்கு 50 டிக்கெட் வரையிலும், படுக்கை வசதிக்கு 200 டிக்கெட் வரையிலும், சேர்கார் (இருக்கை வசதி) 100 டிக்கெட் வரையிலும் காத்திருப்புப் பட்டியல் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏசி முதல் வகுப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் 20 காத்திருப்பு டிக்கெட்டுகள் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் 15-ம் தேதி முதல் முன்பதிவு செய்து வரும் 22-ம் தேதி பயணிப்பவர்களுக்குப் பொருந்தும். தட்கல், ப்ரீமியல் தட்கல், மூத்த குடிமக்களுக்கான ஒதுக்கீடு, ஆர்ஏசி ஆகியவை அனுமதிக்கப்படாது.

மேலும், காத்திருப்பில் உள்ளவர்கள் அந்த டிக்கெட்டுடன் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்குப் பணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே லாக்டவுன் காலத்தில் ரயில் டிக்கெட்டுகளை ஜூன் மாதம் வரை முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதித்திருந்தது. அந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து ரயில்வே வாரியம் நேற்று இரவு அறிவித்துள்ளது

ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “வரும் ஜூன் 30-ம் தேதி அனைத்து பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ், மெயில், புறநகர் ரயில்கள் சேவையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படும்.

ஜூன் 30 வரை பயணிகள் முன்பதிவு செய்திருந்த அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படும். டிக்கெட் கட்டணத்துக்கான முழுத்தொகையும் பயணிகள் வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளது

அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள், சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும்.