முக்கிய செய்திகள்

இந்து வெறியை – பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டிட‘புஷ்கரணி’  ‘அனுமன் ஜெயந்தி’, ‘நாரதர் ஜெயந்தி’ என்று புதிது புதிதாக அறிமுகமா?: கி.வீரமணி

இந்து வெறியை – பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டிட‘புஷ்கரணி’ ‘அனுமன் ஜெயந்தி’, ‘நாரதர் ஜெயந்தி’ என்று புதிதுப் புதிதாக…

Posted by Asiriyar K Veeramani on Wednesday, 26 September 2018

தமிழர்களே, இவர்களின் “பக்தி மயக்க பிஸ்கட்டில்” ஏமாறாதீர்!

தமிழில்கூட பெயரில்லா இவற்றைப் புறக்கணிப்பீர்!

திராவிடர் திருவிழா பொங்கலே!

ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்புகளில் ஒன்றான விசுவ ஹிந்து பரிஷத் (VHP) என்ற அமைப்பு உலகெங்கும் பல நாடுகளில் இந்துத்துவாவை விதைத்து பரப்புவது, பற்பல வெளிநாடுகளில் வியாபாரிகளாக உள்ள வட நாட்டவரை குறிப்பாக மார்வாடிகள் போன் றவர்களை – பணம் படைத்தவர்களாக அவர்கள் இருப்பதைப் பயன்படுத்தி – நன்கொடைகளைத் திரட்டி வருகின்றனர். முன்பு எப்போதும் அங்கு இல்லாத இந்து மதத்தின் ஜாதி – தீண்டாமை முறைகளைக்கூட – ஜாதி மத உணர்வுகளைக் கிளறி, விசிறி விட்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பிய நாடுகளிலும் கால் ஊன்றி வருகிறது. இந்த அமைப்பின் பணி. அயோத் தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதியை இடித்த அந்த இடத்திலேயே இராமன் கோயிலைக் கட்டுவது போன்ற இலக்குகளை வைத்து, காவி மயமாக்கலுக்கு ஒரு முக்கிய துணை அமைப் பாக விசுவ இந்து பரிஷத் செயல்பட்டு வருகிறது.

வி.எச்.பி.யிலிருந்து கரன்சிங் விலகியது ஏன்?
துவக்கத்தில் இதனுடன் சம்பந்தப்பட்டிருந்த (டில்லியில்) காஷ்மீர் பழைய மன்னரின் வாரிசு டாக்டர் கரன்சிங், இவர்களின் உண்மை உருவம் – கலாச்சாரம் பரப்புவது அல்ல, மதவெறி யூட்டுவதே என்று புரிந்து கொண்டு விலகி விட்டார்.

பிறகு அசோக் சிங்கால், போன்ற பார்ப்பனத் தலைமை; அவரைப்பற்றி இராமன் கோயில் நிதியில் ஊழல்கள் என்ற புகார்; மற்ற சில காவிச் சாமியார்கள் கோஷ்டியும் பணத்தைக் கையாடல் செய்ததாக பரஸ்பரக் குற்றச் சாட்டுகள் எல்லாம் எழுந்ததுண்டு.

திரிசூலம் என்பது என்ன?
பிரவின் தொகாடியா, தமிழ்நாட்டிற்கு வந்து, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உயிரோடு இருந்தபோது, அவரது ஆதரவோடு, திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சியை திருச்சி போன்ற நகரங்களிலேயே நடத்தி, மத வெறி யினைத் தூண்டும் வகையில் – திரிசூலத்தில் ஒன்று முஸ்லிம்களையும், இன்னொரு சூலம் கிறிஸ்தவர்களையும், மூன்றாவது மதச் சார்பற்ற தன்மைப் பேசுபவர்களையும் நோக்கிப் பாயும் என்று வெளிப்படையாகவே பேசினார்.

இப்போது மோடி அரசும், அவரது கட்சியும் பிரவின் தொகாடியாவை – கோஷ்டி மோதல் கருத்து மாறுபாடுகளின் அடிப்படையில் வேட்டையாடும் நிலை – அவர் ஓடி ஒளிந்து கொள்ளும் நிலை என்ற “கூத்துக்கள்” எல்லாம் சில மாதங்களுக்கு முன் அரங்கேறின!

இந்துத்வாவை பாமர மக்களிடையே பரப்பி, ஜாதி மதக் கலரவங்களை (மறைமுகமாக) தூண்டும் கோயில் திருவிழாக்களை நன்கு பயன்படுத்திக் கொள்வது என்று அவர்களது (VHP) செயற்குழுவில் வேலைத் திட்டமாகவே கொள்வது என்றும் விவாதித்துள்ளனர்.

மஞ்சேரி என்ற அம்மையார் – (Ph.D) ஆராய்ச்சியாளர் எழுதிய நூலில் நாம் சுட்டிக் காட்டுவதற்கு ஆவணச் சான்றுகள் ஏராளம் உள்ளன!

புதிய புதிய மதப் பண்டிகைகளின் பின்னணி என்ன?
வீட்டுக்குள் இருந்த விநாயகர் சதுர்த்தியை நாட்டுத் திருவிழாபோல் பொது இடங்களில் பிள்ளையார் பொம்மைகளை வைத்து 3 நாள் வழிபட்டு (ஏராளமான பணச் செலவில்), பிறகு கடலில் ஆற்றில் கரைத்திட ஊர்வலம் என்பதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரத்தின் செயல் திட்டங்கள்!

புதிய புதிய மதப் பண்டிகைகளை உருவாக்கி – மதப் போதையை சாதாரண இந்துமத பக்தர்களுக்கு ஊட்டுதல் – அங்கே காவிக் கொடியை நட்டு ஊர்வலத்தில் தூக்கிக் செல் லுவது என்பதெல்லாம் நடந்து கொண்டுள்ளன. இளைஞர்கள் “கூலிப்பட்டாளங்களாக” ஏழ்மை யைப் பயன்படுத்தி மது போதை – மதப் போதைகளுக்கு ஆளாக்கப்படும் பரிதாப நிலை! பல இடங்களில் கோயில் கோபுரங்களில் காவிக் கொடிகளைப் பறக்கவும் விட்டுள்ளனர்.

முன்பு சாதாரண கலவரமில்லாத பிள்ளை யார் சதுர்த்திக்கு போலீஸ் காவலும், கட்டுப் பாடுமா தேவைப்பட்டது? இதனை பக்தர்கள் கூடப் புரிந்துகொள்ள வேண்டும்!

“அனுமன் ஜெயந்தி’’ – வடைமாலை என்று பக்தர்கள் திரட்டப்படுகிறார்கள். அனுமார் – புராணப்படி ‘வாயு புத்திரன்’ – காற்றுக்குப் பிறந்தவனாம்! அவனுக்கு என்ன பிறந்த நாள் – ஜெயந்தி? (குரங்கு எப்போது பிறந்தது என்று விஞ்ஞானிகளைக் கேட்டால் ஒரு வேளை கூறலாம்) இவர்கள் எப்படி ஜாதகம் கணித்தனர்?

அதுபோலவே திடீரென நாரதர் ஜெயந்தி, ‘வால்மீகி ஜெயந்தி’ – இத்தியாதி, இத்தியாதி!

ஏற்கெனவே இராமநவமி, கோகுலாஷ்டமி, கந்தர் சஷ்டி, விநாயகர் சதுர்த்தி – இப்படி உள்ளனவே!

மதப்பண்டிகைகளைப் பயன்படுத்தி – கலகங்களுக்குக் களம் அமைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியின் வேலை. எவ்வளவு மோசம்? இதை எப்படி அனுமதிக்கலாம்?

அது என்ன “புஷ்கரணி?”
பார்ப்பனருக்கு யாகம் என்றால் வருமான யோகம்! யாகக் கலாச்சாரம் தமிழ்நாட்டில் முன்பு உண்டா? கிடையவே கிடையாதே!

திடீரென்று காவிரி – தண்ணீரே அப்போது இல்லை – காஞ்சி சங்கராச்சாரியாரும் ‘காவிரி புஷ்கரணி’ என்ற ஒரு திவச பண்டிகையாம் – முதல்வரும், அமைச்சர்களும் அரைக்காலில் முக்கி எழுந்த வேடிக்கை – வேதனை.

இப்போது தாமிரபரணியில் புஷ்கரணியாம்! கண்ட கண்ட இடங்களில் இறங்கி முழுக்குப் போடுகிறார்கள். மக்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு, உத்தரவாதம்?

ஏற்கெனவே பிள்ளையார் கரைப்பில் எத்தனை உயிர்கள் பலி! மகாராட்டிர மாநிலத்தில் 18 பேர் பலியாகியுள்ளனரே!

இவைகள் எல்லாம் பார்ப்பனர் கைகளால் மற்ற மக்களின் மூளையில் போடப்படும் பக்திப் படை யெடுப்பு விலங்குகள் என்பதைப் புரிந்து கொள்வீர்!

திராவிடருக்குத் திருநாள் அறுவடை நாளாம் பொங்கலே!

பொங்கல் விழா – அறுவடைத் திருநாள்! அது திராவிடரின் உழவர் திருநாள்! அறிவுக்கும் – உழைப்புக்கும் பெருமை ஏற்படும் நன்றித் திருவிழா!

ஆனால் இந்துமத புராணக் குப்பைகளில் தேடித் தேடி இப்படி புதுப்புது இறக்குமதிகளை – அவற்றின் வடமொழி சமஸ்கிருதப் பெயர்களை சூட்டுகின்றனர். அதற்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா? ஒன்று நமக்குச் சம்பந்தம் உள்ளதா, இல்லையா என்பதை அது எந்த மொழியில் உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார்! அதை இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் இல்லாது புதிது புதிதாக முளைக்கின்றன.

தமிழர்களே, பக்தி மயக்க பிஸ்கட் எச்சரிக்கை!

எனவே பார்ப்பனர்களால் – பா.ஜ.க.வால் – ஆர்.எஸ்.எஸ். ஜாதி ஊடுருவ முடியாத தமிழ்நாட்டில் பக்தி மயக்க பிஸ்கட்டுகளை, விஷ உருண்டை சர்க்கரை பூசி தடவித் தருவது போன்ற இந்த முயற்சிகளை பக்தர்களாக உள்ள தமிழர்கள் புரிந்து புறந்தள்ளி மீள்க! இன்றேல் “மூளைக்காய்ச்சலால்” நம் வாழ்வு பறிபோவது உறுதி!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

26.9.2018
சென்னை