“கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் கூறுவது பச்சை பொய்!” : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்….

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் பச்சைப் பொய் பரப்பி வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை நேதாஜி ரோடு, ஜான்சி ராணி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.
“இந்த மக்களவை தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை. இரண்டே இரண்டு கருத்தை மட்டும் வைக்க விரும்புகிறேன். தமிழ்நாடு பழைய தவறான பாதையை விட்டு தற்போது முன்னேறி உள்ளது. முதல்வரின் தயவாலும் என்னுடைய உழைப்பாலும் எண்ணற்ற திட்டங்கள் மதுரைக்கு கிடைத்துள்ளன.

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் என நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1 கோடி பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1.15 கோடி மகளிர்க்கு கிடைத்துள்ளது.

1 ரூபாய்க்கு 35 பைசா வரியை கொடுத்ததை நிறுத்தி, 29 பைசா கொடுப்பதை நாடாளுமன்றத்தில் பாஜகவினர் பெருமையாக பேசுகிறார்கள். பேரிடரின் போது உதவி கேட்டால் ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. மாநிலப் பட்டியலில் உள்ள கல்வி உரிமை, நிதி உரிமையை பறித்துள்ளனர். மோசமான ஆளுநரை பொறுப்பில் வைத்துள்ளனர்.

பல கோடி ரூபாய் எதற்காக செலவு செய்கிறோம் என தெரியாமல், எந்தப் பணியையும் செய்யாத ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர். கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ அறிக்கை வெளியாகி உள்ளது என பச்சைப் பொய், புரளியை கிளப்புகின்றனர்.

ஜனநாயகத்திற்கு வாழ்வா? சாவா? என்ற அடிப்படையிலான தேர்தல் இது. ஜனநாயகம் ஏற்கனவே செத்துவிட்டது. ஜனநாயகம் மீதும் நாட்டின் மீதும் பற்றுள்ளவர்கள் I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களியுங்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதா? என்பதை போல பாஜக அரசு பற்றி மக்கள் யோசிக்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் இரண்டு மாநில முதல்வர்களை கைது செய்து, எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்கை முடக்கி தேர்தலை நியாயமான முறையில் நடத்த முடியாத சூழலை உருவாக்கி உள்ளனர்.