கோவை கல்லுாரியில் பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடிய மாணவி சஸ்பெண்ட்..

கோவையில் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடிய மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள அரசுக் கலைக்கல்லூரியில் வரலாறு துறையைச் சேர்ந்த முதுநிலை மாணவி மாலதி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 28 கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்து கல்லூரி வளாகத்தில் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடினார்.

இது கல்லூரி விதிமுறைக்கு மீறிய செயல் என்று கூறி மாலதியை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
இது குறித்து மாணவி மாலதி தரப்பில் கூறுகையில், ‘பகத்சிங்கின் பிறந்தநாளை கொண்டாடியதற்காக என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள்.

மேலும், என்னுடைய சஸ்பெண்ட் கடித்தை காவல்நிலையத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள். காவல்நிலையத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு? நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற கேள்வி தான் எழுகிறது. பேச்சு சுதந்திரம், கருத்துரிமை எல்லாம் உள்ளது.

இந்த கல்லூரி ஜனநாயகத்தின் கீழ் தான் செயல்படுகிறது. எனவே, கல்லூரியின் நடவடிக்கைக்கு எதிராக நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.’ இவ்வாறு தெரிவித்தார்.

ஆனால், மாணவி மாலதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில்,’மாணவி மாலதி கடைசி நேரத்தில் தான் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாட மாணவிகளை திரட்ட அனுமதி கேட்டார்.

கடைசி நேரத்தில் மாணவிகளை ஒருங்கிணைப்பது சிரமம் என்பதால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும், கல்லூரி சட்டதிட்டங்களுக்கு எதிராக மாணவி மாலதி பகத்சிங்கின் பிறந்தநாளை மற்ற மாணக்கார்களை திரட்டி கொண்டாடினார்.

இது கல்லூரியின் அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைந்தது. எனவே தான் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் ஆலோசனை நடத்தி மாணவியை சஸ்பெண்ட் செய்துள்ளோம்’ இவ்வாறு தெரிவித்தார்.