க்ரியா பதிப்பக உரிமையாளர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் காலமானார்..

தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னோடி ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

தமிழ்ப் பதிப்புலகத்தின் மூத்த ஆளுமையாக கருதப்பட்டவர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன். தனது க்ரியா பதிப்பகம் மூலம் தற்கால தமிழுக்கான அகராதியை வெளியிட்டார். தமிழ்ப் பதிப்புலகத்தில் பெரும் சாதனையாகக் கருதப்பட்ட இந்த அகராதி, எக்காலத்துக்கும் ஏற்ற, பயன்படும் அகராதியாக உள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், தற்கால தமிழ் அகராதியை மேலும் விரிவாக்கி மூன்றாவது பதிப்பாக சமீபத்தில் படுக்கையிலிருந்தபடியே வெளியிட்டார். படுக்கையில் இருந்தபடியே அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வந்தார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இந்நிலையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று (நவ. 17) அதிகாலை எஸ்.ராமகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 75. அவருடைய மறைவுக்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.ராமகிருஷ்ணனின் தாய்மொழி தெலுங்கு மொழியாக இருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்ததால், தன்னை ஒரு தமிழராகவே கருதினார். லயோலா கல்லூரியில் சமூகப்பணி துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன், விளம்பரத்துறையில் பணியாற்றி பின்னர், தன் 30-வது வயதில் பதிப்புலகுக்கு வந்தார். க்ரியா பதிப்பகத்தை 1974-ம் ஆண்டில் தொடங்கினார்.

சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் என பல தலைப்புகளின்கீழ் இப்பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. 1978-ம் ஆண்டிலிருந்து இந்தி, வங்கமொழி, கன்னடம், என பல மொழிகளில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் வெளியிட்டது.
தமிழ்ப் பதிப்புலகத்தில் முக்கிய ஆளுமையான க்ரியா பதிப்பகம் ராமகிருஷ்ணன் மறைவு வேதனையை அளிக்கிறது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.