குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு..

அரபிக் கடலில் உருவான கியார் புயல் கடந்த 25-ம் தேதி தீவிர புயலாக மாறி வடமேற்காக ஓமன் நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த புயல், வருகின்ற 2-ம் தேதி ஒமனை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தென்கிழக்கு அரபிக்கடலின் கன்னியாகுமரி பகுதி அருகே நாளை ஒரு புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் கியார் பயணிக்கும் அதே பாதையில் செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கியார் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன்,

கர்நாடகம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கியார் புயலால் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற வள்ளவிலை, சின்னதுறை, தூத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட படகுகள் இன்னும் கரை திரும்பவில்லை என்று குமரி மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அரபிக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 27 படகுகளை தொடர்பு கொண்டு அருகில் உள்ள துறைமுகங்கள் அல்லது தீவுகளில் கரை ஒதுங்கும்படி அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.

கியார் புயல் பயணித்துக் கொண்டிருக்கும் அதே பாதையில் மீன்பிடிக்கச் சென்ற 5 படகுகளை சேர்ந்த 40 முதல் 55 மீனவர்களை முழுமையாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் ஓமன் நாட்டின் துறைமுகங்களில் கரை ஒதுங்க வாய்ப்பிருப்பதால்

ஓமன் நாட்டு கடலோர காவல்படை மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு உதவி கேட்கப்பட்டுள்ளதாகவும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, இலங்கை அருகே தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி,

இன்று குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்து வலுப்பெறும் என்றும் நாளை அல்லது நாளை மறுநாள் தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி,நெல்லை, தூத்துக்குடி, புதுகோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.