பாஜகவை அனுசரிக்காவிட்டால் லாலுவுக்கு ஏற்பட்ட கதிதானோ!

 

பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் ராஷ்ட்ரிய  ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் தற்போது ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு மாட்டுத் தீவன வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு சப்பாத்தி, சிறிய அளவில் சோறு என மிகக் குறைவாகவே  உணவு எடுத்துக் கொள்வதாக சிறைவட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். அறை எண் 3351ல் லாலு அடைக்கப்பட்டுள்ளார். ஒரு தொலைக்காட்சி, மரக்கட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் தூர்தர்ஷன் செய்தி மட்டும் பார்க்கலாம். அன்றாடம் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வரும் லாலு, சிறையிலும் அதனைத் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த முறை இதே சிறையில் அடைக்கப்பட்ட போது மிகவும் கலகலப்பாக இருந்துள்ளார். இந்த முறை அதிகம் பேசுவதில்லை. பெரும்பான்மையான நேரம் மவுனமாகவே காணப்படுவதாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில், கட்சித் தொண்டர்கள் லாலுவின் மனைவி  ராப்ரிதேவியைச் சந்தித்து ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர். “2014 ஆம் ஆண்டு லாலு ஜிக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அன்றாடம் கவனமாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறையில் அவருக்கு அது சரியாக வழங்கப்படுகிறதோ இல்லையோ” என சந்திப்போரிடம் ராப்ரிதேவி வேதனையை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும், ஜாமீன் கோரித் தாக்கல் செய்வது குறித்து கட்சியினருடன், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரசாத் யாதவ் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். பாஜகவின் பழிவாங்கும் படலங்களில் ஒன்றாகவே இந்த வழக்கில் லாலு சிறையிலடைக்கப் பட்டிருப்பதாக ஆர்ஜேடி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நிதிஷ்குமாருக்கு கை கொடுத்து அவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்திய லாலு, இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிதிஷ்குமாரோ, லாலுவைக் கழற்றிவிட்டு விட்டு, பாஜக பல்லக்கில் ஏறி தனது ஆட்சிப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். தள்ளாத வயதில் லாலு நிதிஷை நம்பி ஏமாந்து விட்டதாகவே ஆர்ஜேடி கட்சியினர் புலம்புகின்றனர்.

அது எந்தக் கட்சித் தலைவராக இருந்தாலும் ஒன்று அவர்கள் பாஜகவுக்கு பணிந்து போக வேண்டும், அல்லது இதுபோன்ற தண்டனையை அவர்கள்  அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் இந்திய அரசியலின்  இன்றைய போக்காக இருப்பதாகவும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

Lalu In Jail