சீனாவுக்கு போட்டியாக இந்தியாவின் ஆளுமைக்கு வரும் இலங்கை விமான நிலையம்..


வர்த்தக ரீதியில் பின் தங்கி இருக்கும் இலங்கையின் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை இயக்க இந்தியா ராஜதந்திர வகையில் வெற்றி பெற்றுள்ளது.

உலகிலேயே பயணிகள் வரவு இல்லாமல், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இல்லாமல் வர்த்தக ரீதியில் பின் தங்கி இருக்கும் விமான நிலையம் இலங்கையின் ஹம்பன்தோடாவில் இருக்கும் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்.

இந்த விமான நிலையம் கடந்த 2013ல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்டத்தில் இருந்து பெரிய அளவில் விமானப் போக்குவரத்தும் நடக்கவில்லை, சரக்குகளும் கையாளப்படவில்லை. சர்வதேச அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நஷ்டத்தை ஈடுகட்டவும், விமான நிலையத்தை லாபகரமாக மாற்றவும் இலங்கை அரசு கூட்டணிக்கு அழைப்பு விடுத்து இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து இந்த விமான நிலையத்தை இயக்க முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் நிர்மல் ஸ்ரீபாலா டே சில்வா டெல்லியில் கூறுகையில், ”நஷ்டத்தில் இருக்கும் இந்த விமான நிலையத்தை மீட்டு கொண்டு வருவதற்கான செயல்களில் இறங்கியுள்ளோம். 20 பில்லியன் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவும், இலங்கையும் இணைந்து இந்த விமான நிலையத்தை இயக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான இறுதிக்கட்ட ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை.

இந்த விமான நிலையம் இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது இந்தியாதான் எங்களுக்கு உதவ முன் வந்துள்ளது. அவர்களுடன் பேசி வருகிறோம்” என்றார்.