முக்கிய செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது….

இலங்கை அதிபர் தேர்தலின் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.

இன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

நள்ளிரவுக்குள் முடிவுகள் தெரியவர வாய்ப்புகள் அதிகமுள்ளன.

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் ஜனவரி 9ம் தேதி நிறைவடைவதால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது.

இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபர் மைத்ரிபால சிறீசேனா, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது கட்சியே ஒப்புதல் அளிக்கவில்லை.

இதையடுத்து அவர் தனது ஆதரவை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபயவுக்குத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளரான கோத்தபய தான், விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை முன்னின்று நடத்தியவர்.

அவரை எதிர்த்து ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனும், இலங்கை அமைச்சருமான சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார். அவருக்கு தமிழர் தேசியக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

இத்தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 59 லட்சம் பேர் பதிவு பெற்றுள்ளனர். காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும்.

வழக்கம் போல் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும். எனினும், முழுமையான தேர்தல் முடிவுகள் வழக்கத்தைவிட தாமதாகும் எனக் கூறப்படுகிறது.

முழு முடிவுகளை திங்கள்கிழமை காலைதான் வெளியிட முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

இலங்கையில், பதவியில் இருக்கும் அதிபரோ, பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ போட்டியிடாத முதல் அதிபர் தேர்தல் இதுவாகும். தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, வடமேற்கு இலங்கையில் மன்னார் பகுதியில் முஸ்லிம் வாக்காளர்களை ஏற்றி சென்ற 2 பேருந்துகள் மீது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி தாக்கியதுடன் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வாக்குப்பதிவு மையம் அமைந்துள்ள மன்னார் பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே டயர்களை தீயிட்டு எரித்து தற்காலிக தடைகளை ஏற்படுத்திய துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள், பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, பேருந்துகளில் இருந்தவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு வாக்களிக்க அழைத்துச் சென்றனர்.