தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…

தமிழகத்தில் வரும் மே.31-ந்தேதி வரை 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்..
மெட்ரோ ரயில்,மின்சார ரயில் போக்குவரத்திற்கும் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர் ,செங்கல்பட்டு, விழுப்புரம்,  திருவண்ணாமலை, கடலுார், ராணிப்பேட்டை  அரியலுார்,பெரம்பலுார்,திருப்பதுார்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஊரடங்கில் எந்தவிதமான தளர்வுகளும் இல்லை.
மற்ற 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.. தொழிற்சாலைகள் பாதுகாப்புடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள்,பூங்காக்கள்,கடற்கரைகள் போன்றவற்றிக்கும் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள SEZ, EOU & Export Units –50 சதவீதத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக, மே 13 அன்று நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும்; மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் மே 14 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுகளின் அடிப்படையிலும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு மே 31 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

எவை எவைக்குத் தடை?

1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.

2. வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

3. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (bar), உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

4. அனைத்துவகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

5. பொதுமக்களுக்கான விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிற பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது. ( மத்திய / மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரயில், பொதுப்பேருந்து போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.)

6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.

7. மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

8. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.

9. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

10. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கெனவே நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.

* நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.

* தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர ((Except Containment Zones) பிற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.

* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர (Except Containment Zones), பிற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.