தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சமூகநீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவு: மு.க.ஸ்டாலின்

சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் பேரணியை- திமுக முழு மூச்சுடன் ஆதரிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூகநீதிக் கொள்கையின் ‘சாம்பியனாக’ விளங்கும் திராவிட இயக்கத்தின், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் வெற்றியின் விளைவாக, தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 சதவீத இடஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி 27 சதவீத இடஒதுக்கீட்டு முறையை அமல் படுத்தியதில், சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் திரு. வி.பி.சிங் அவர்கள் மூலமாக, திராவிட முன்னேற்றக் கழகமும், கலைஞரும் சீரிய பங்காற்றியதை வரலாறு மறக்காது.

பிரதமர் பதவியையும் துச்சமென மதித்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்திய சமூகநீதிக் காவலர்  வி.பி.சிங்கை, சமூகநீதியின் பயன்களைத் துய்த்து வரும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் என்றைக்கும் தங்கள் நினைவில் வைத்திருப்பார்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்காகவும், சிறுபான்மையினருக்காகவும் திராவிட இயக்கம் நிறைவேற்றிய சமூகநீதிச் சாதனைகள் ஏராளம்.

இந்நிலையில், சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களு க்கு இடஒதுக்கீட்டை அதிகரித்துள்ள தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் சமூகநீதிப் பயணம் பாராட்டத்தக்கது. அதேநேரத்தில், “இடஒதுக்கீட்டை மாநிலங்களே முடிவு செய்துகொள்ளும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்”, என்று அவர் டெல்லி ஜந்தர்மந்தரில் நடத்த விருக்கும் பேரணி குறித்து, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரவேற்பும், மகிழ்ச்சியும் கலந்த உடன்பாடு மிக்குண்டு. ‘இடஒதுக்கீடு சதவீதத்தை நிர்ணயம் செய்து, வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் முழுமையாக வழங்க வேண்டும்’, என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்டநாள் கோரிக்கையை தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் முன்னெடுத்துச் செல்வது, தமிழகத்தின் உரிமைக்குரல் அண்டை மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருப்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.

ஆகவே, இடஒதுக்கீடு அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும் என்றும், அதில் மத்திய அரசு எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது என்பதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மிக உறுதியாக இருக்கிறது. அது மட்டுமின்றி, மத்திய அரசு பணிகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 27 சதவீத இடஒதுக்கீடு சிதைந்து விடாமல், முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு பணி களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்றும் சமூகநீதிக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில் இடஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கே கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா முதலமைச்சர் திரு. சந்திரசேகர் ராவ் அவர்கள், டெல்லி ஜந்தர்மந்தரில் நடத்த விருக்கும் பேரணிக்கு, தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் ஆதரவு தெரிவித்து, அந்தப் பேரணி குறிப்பிடத்தக்க வெற்றியினைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

M.K.Stalin support Chandrasekara Rao’s Rally for social justice