“மதுரை எய்ம்ஸ்-க்கான இரண்டாவது செங்கல் எப்போது வரும்?” : மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி…

மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் கல்வி நிறுவனத்தை உடனே துவங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு ஒரு செங்கல்லோடு நிற்கிறது. இரண்டாவது செங்கல் எப்போது வரும் என மக்களவையில் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “NIPER எனும் தேசிய மருந்து சார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் சம்பந்தப்பட்ட இந்த மசோதா வில் முதலிலே என்னுடைய அதிர்ச்சியைப் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இன்றைக்கு மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்.

இந்த நேரத்தில் NIPER கவுன்சிலில் SC,ST பிரிவினருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் நிலைக்குழுவினுடைய பரிந்துரையை ஏற்க மறுத்து தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடத்தை இந்த மசோதா உறுதிப்படுத்தவில்லை என்பது கடும் அதிர்ச்சியை உருவாக்குகிறது.

அதேபோல சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – அடித் தட்டு மாணவர்களின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட விஷயங் களைப் பற்றி இந்த மசோதா பேச மறுக்கிறது. இவை எல்லாம் ஒரு உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத் தில் சமூகநீதியை உறுதிப்படுத்து வதிலே இருந்து தவறுகிற ஒரு செயல் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.
ஒன்றிய ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் பழம்பெருமையை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று சொல்வார்கள். பழம்பெருமை என்பது வேறு. நம்முடைய மரபு என்பது வேறு. மர புக்கும் பெருமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. கால் நீட்டி உட்கார்ந்து பழைய கதையைப் பேசிக் கொண்டிருப்பது பழம்பெருமை. பெருமை மக்கும். ஆனால் மரபு மக்காது. அது புதிய தலைமுறைக்கு புதிய அறிவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

Make In India பற்றி பிரதமர் அடிக்கடி பேசுகிறார். Think in India மிக முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளில் நைபர் (NIPER) மூலமாக வெறும் 40 கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப் பட்டு காப்புரிமை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் மதுரையில் NIPER அமைக்கப்படும் என ஒன்றிய அமைச்சரவையும் உறுதிப்படுத்தியது. இந்தியாவில் 8 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் உடனே துவங்கப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒன்றிய அமைச்சரகம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இன்றைக்கு வரை 12 ஆண்டுகளாக எதுவும் நிகழவில்லை. தமிழக அரசு மட்டும் தான் மதுரையில் திருமோகூர் 116 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது. இது கொடுத்தே 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்றுவரை NIPER துவக்கப்படவில்லை. இதுபோல் மதுரையில் AIIMS அறிவிக்கப்பட்டு ஒரு செங்கல்லோடு நிற்கிறது. எய்ம்ஸ்க்கான இரண்டாவது செங்கல்லுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். எய்ம்ஸ் போல் NIPER மாறிவிடக் கூடாது” என தெரிவித்துள்ளார்.