பிரதமர் மோடி 2-நாள் பயணமாக தமிழகம் வருகை…

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வருகிறார்.
நாளை மறுதினம் 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்கிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை குழுவினர் ஆய்வுசெய்தனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுதினம் தொடங்கி, அடுத்த மாதம் 10-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதனையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார்.

அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம், நாளை மறுதினம் மாலை 4.45 மணிக்கு சென்னையை வந்தடைகிறார்.அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையார் விமான தளத்துக்கு செல்கிறார். பின்னர் கார் மூலம், நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.
செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றுவிட்டு, கார் மூலம் ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.ஆளுநர் மாளிகையில் இரவில் தங்கும் பிரதமர், 29-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு, அண்ணா பல்கலைக் கழகம் சென்று அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.