முக்கிய செய்திகள்

என்னை ‘நீக்க’ பாகிஸ்தானியர்களிடம் பேசியவர் மணிசங்கர் அய்யர் : மோடி தாக்கு..


காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தாக்கிப் பேசியுள்ளார்.

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில் நேற்றுமுன்தினம் வட குஜராத்திலுள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, “என்னை இழிவான மனிதர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசுகிறார். ஆனால் மதிப்புக்குரிய மணி சங்கர் அய்யர் என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?

நான் பிரதமரான பின்னர் பாகிஸ்தானுக்குச் சென்று மணி சங்கர் அய்யர் அங்குள்ள சில பாகிஸ்தானியர்களை சந்தித்து என்னை நீக்குமாறு ஒப்பந்தம் கொடுத்துள்ளார். அவரது பேச்சு சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது. மோடி இருக்கும் வரை இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மேம்படாது. எனவே அவரை அந்த வழியிலிருந்து `நீக்க’வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அவர் என்னை இழிவான மனிதர் என்று கூறுகிறார். அவர் என் மீது பழி போடுகிறாரா அல்லது குஜராத் மீதா அல்லது இந்த தேசத்தின் மீதா என்பது தெரியவில்லை. பேச்சுவார்த்தைக்கான வழியிலிருந்து நீக்குதல் என்று பேசியிருக்கிறார் மணிசங்கர் அய்யர். அப்படி என்றால் என்ன…? நீங்கள்(மணி சங்கர்) பாகிஸ்தானுக்குச் சென்று பாகிஸ்தானியர்களைச் சந்தித்து என்னை நீக்குவதற்கு ஒப்பந்தம் (சுபாரி) தந்துள்ளீர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் பொதுமக்கள் இதைப் பற்றி கவலைப் படவேண்டாம். என்னை தேவி (கடவுள்) பாதுகாத்து வருகிறார். எனக்கு ஒன்றும் நடக்காது. மணி சங்கர் பேசியது 3 வருடங்களுக்கு முன்பு என்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை காங்கிரஸ் மூடி மறைக்கப் பார்க்கிறது. அவர் மீது எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் கட்சி எடுக்கவில்லை. இதில் எனது தவறு எங்கே இருக்கிறது? மக்கள் ஜனநாயக வழியில் என்னைத் தேர்வு செய்தனர். நான் மக்களுக்கு நல்லதைச் செய்து வருகிறேன்.

மணி சங்கர் பேசியதைப் பற்றியெல்லாம் மக்கள் இப்போது சிந்திக்கத் தேவையில்லை. மக்கள் தங்களது சிந்தனையை தற்போது தேர்தலில் வாக்களிப்பதில் மட்டுமே செலுத்தவேண்டும். தேர்தல் முடிவுகள் மூலம் காங்கிரஸுக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டும். டிசம்பர் 18-ம் தேதி முடிவுகள் வரும்போது காங்கிரஸார் இதைப் புரிந்துகொள்வார்கள்” என்றார்