திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்: திமுக தேர்தல் அறிக்கை..

திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எடுத்துரைத்தார். பின்னர் அவர் அறிக்கையை ஸ்டாலின் கைகளில் கொடுத்தார். அதன்பின்னர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார்.

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஸ்டாலின், “சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பது எங்களது வழிகாட்டும் நெறிமுறை. அதன் அடிப்படையில் தான் இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது திமுக தேர்தல் அறிக்கை மட்டுமல்ல தமிழக மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது.
2014ல் ஆட்சிக்கு வந்த பாசிச பாஜக இந்தியாவை பாழ்படுத்திவிட்டது. இந்தியாவின் கட்டமைப்புகள் அனைத்தும் சிறுக, சிறுக சிதைக்கப்பட்டுள்ளன. கையில் கிடைத்த வாய்ப்பை பாஜக நழுவவிட்டது. இனியும் பாஜக ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. மக்கள் ஆட்சியை செம்மைப்படுத்தும் ஆட்சியாக புதிய ஆட்சி அமைய வேண்டும். அத்தகைய ஆட்சி அமைந்த பின்னர் தமிழக மக்களுக்கு செய்யக் கூடியவற்றை இந்தத் தேர்தல் அறிக்கையில் விளக்கியுள்ளோம்.
64 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். தங்கை கனிமொழி தலைமையிலான குழு மிகச் சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. தேர்தல் அறிக்கையை தயாரித்த கனிமொழிக்கும், குழுவினருக்கு தலைமைக் கழகம் சார்பில் நன்றி. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான அம்சங்களை மட்டும் நான் இங்கு வாசிக்கிறேன்” என்றார்.

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: * மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறுகின்ற வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.

  • ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அந்தப் பதவி இருக்கும் வரைக்கும் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனையைப் பெற்று ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
  • உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
  • புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
  • ஒன்றிய அரசுப் பணிகளுக்குத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
  • ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
  • அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.
  • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
  • தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
  • ரயில்வே துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
  • புதிய கல்விக் கொள்கை இரத்து செய்யப்படும்.
  • நாடாளுமன்ற – சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
  • நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக் குழு அமைக்கப்படும்.
  • மகளிர் சுய உதவிக்களுக்கு 10 லட்ச ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.
  • பா.ஜ.க. அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
  • வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
  • குடியுரிமைத் திருத்தச் சட்டம் – 2019 இரத்து செய்யப்படும்.
  • ஒன்றிய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  • ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
  • தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும்.
  • வேளாண் விளைப் பொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு + 50 விழுக்காடு என்பதை வலியுறுத்தி உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.
  • இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.
  • எல்.பி.ஜி. சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் விலை 65 ரூபாயாகக் குறைக்கப்படும்.
  • பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து 150-ஆகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
  • ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும்.
  • பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.
  • ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
  • மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
  • ரயில்வே துறையில் வழங்கப்பட்டுவந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
  • இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
  • சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசினார்.