ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தினை மாற்றியமைத்திட கடந்த மே மாதம் 22ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த பேராசிரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உருவாக்கப்பட்டு, வரைவு பாடத்திட்டம் தயாரிக்க ப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயச்சந்திரன், தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவர் பேராசிரியர் எம். ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் பாடத்திட்டத்தினை உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் படித்துப்பார்த்து, இணைய வழியே கருத்துகளை பதிவேற்றம் செய்திடலாம்.
மேலும், கடிதம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு ஒருவாரத்திற்குள் பெறப்படும் கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 1, 2, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டிலும், மற்ற வகுப்புகளுக்கு அதற்கடுத்த கல்வியாண்டிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய பாடத்திட்டங்கள் மூலம், தமிழகத்தின் கல்வித்தரம் இந்தியாவே வியக்கும் வகையில் இருக்கும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.