இந்தியா-இஸ்ரேலுடனான ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் ரத்து..


ராணுவ டாங்க்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நோக்கத்துடன், இஸ்ரேலிடமிருந்து அவற்றை கொள்முதல் செய்யும் திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
டாங்க்குகளை தாக்கி அழிக்கும் ஸ்பைக் ஏவுகணைகளை, இஸ்ரேல் அரசின் ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. விலை தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச்சில் தொடங்கி, கடந்த ஆண்டு ஜூனில் இறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து இந்தியா-இஸ்ரேல் இடையே 500 மில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்பைக் ஏவுகணை கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருந்தது. இதை எதிர்பார்த்து, இஸ்ரேலின் ரஃபேல் நிறுவனம், இந்தியாவில் ஏவுகணை தயாரிப்பிற்காக கல்யாணி (Kalyani) குழுமத்துடன் ஜாயின்ட் வெஞ்சர் மேற்கொண்டது. ஹைதராபாத் அருகே கடந்த ஆகஸ்ட்டில் உற்பத்திப் பிரிவும் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேலிடமிருந்து ஸ்பைக் ஏவுகணைகள் கொள்முதல் செய்யும் திட்டத்தை பாதுகாப்பு துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
டாங்க்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது, உள்நாட்டில் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மூலம் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்படுத்தலாம் என்பதால், கொள்முதல் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டிஆர்டிஓ ஏற்கெனவே இந்த ரகத்தை சேர்ந்த நாக் உள்ளிட்ட ஏவுகணைகளை வெற்றிகரமாக தயாரித்துள்ளது.
எனவே, ஸ்பைக்கிற்கு நிகரான மூன்றாம் தலைமுறை டாங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் தயாரிக்க முடியும் என டிஆர்டிஓ நம்பிக்கையுடன் உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.