நியூசிலாந்து தேர்தல் : மீண்டும் வெற்றி வாகைசூடி பிரதமராகிறார் ஜெசிந்தா ஆர்டன்…

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் வெற்றி கொண்டாட்டத்தில்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்நாட்டில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 49% வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் இவர் மீண்டும் ஆட்சியமைப்பார் என்று கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு பரவலைத் தடுத்த திருவாட்டி ஜெசிந்தா மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

சுமார் 27% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள எதிர்க்கட்சியான தேசிய கட்சி, தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி, இன்று காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு ஏழு மணியளவில் முடிவுற்ற நிலையில், உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி குறித்து மக்களிடையே உரையாற்றிய ஜெசிந்தா, “நியூசிலாந்து மக்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழிலாளர் கட்சிக்கு தங்களது மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ளனர். அனைத்து நியூசிலாந்து மக்களுக்குமான ஆட்சியை எங்களது கட்சி வழங்கும் என்று உறுதியளிக்கிறேன்,” என்று tஹமத் உநன்றியுரையின்போது அவர் கூறினார்.

ஜெசிந்தாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள தேசிய கட்சித் தலைவர் ஜூடித் காலின்ஸ், தனது கட்சி “வலுவான எதிர்க்கட்சியாக” இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெசிந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில், நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஒரு வருடத்திற்கு முன்னர் பிரதமர் மோடி- நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா இருவரும் கடைசியாக சந்தித்ததை நினைவு கூர்ந்து, இந்தியா-நியூசிலாந்து உறவை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.