தினகரனை நம்பித்தான் சந்தித்தேன்.. நாகரிகமில்லாமல் வெளியே சொல்லி விட்டார்: ஓபிஎஸ்

தர்ம யுத்தத்தில் தாம் ஈடுபட்டிருந்த காலக்கட்டத்தில் டிடிவி தினகரன் மனம் திருந்தி விட்டதாக நம்பி அவரைச் சந்தித்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தம்மை ரகசியமாக வந்து சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறியது குறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நான், பின்னர் தர்மயுத்தத்திற்காக அப்பதவியை ராஜினாமா செய்தேன். சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரிடம் அதிமுக போய்விடக் கூடாது என்பதற்காகவே தர்மயுத்தத்தைத் தொடங்கினேன். ஜெயலலிதாவாக பார்த்து என இரண்டு முறை முதலமைச்சராக்கினார். அவரிடம் அந்த அளவுக்கு விசுவாசமாக நடந்து கொண்டேன். அந்த திருப்தி ஒன்றே எனக்குப் போதும். குறுக்குவழியில் முதலமைச்சராக வேண்டும் என எப்போதுமே நான் ஆசைப்பட்டதில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை .ஆட்சியை விட, கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதிலேயே எனக்கு எப்போதும் விருப்பம் அதிகம்.

தினகரனை சந்தித்தது உண்மை. தர்மயுத்தத்தில் ஈடுபட்டிருந்த போது, தினகரன் மனம் திருந்திவிட்டார். உங்களிடம் மனம் விட்டு பேச விரும்புகிறார் என எங்கள் இருவருக்கும் நெருங்கிய பழைய நண்பர் ஒருவர் எனை வற்புறுத்தி அழைத்தார். அதன் பேரிலேயே தினகரனைச் சந்தித்தேன். மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக அப்போதும் கூறிக் கொண்டிருந்தார். அந்த எண்ணத்தை மாற்றுவதற்காகவும் தினகரனைச் சந்தித்தேன். ஆனால், அவர் தாம் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையுடனேயே பேசினார். அதில் எனக்கு உடன்பாடில்லாததால் வந்து விட்டே ன். இந்த சந்திப்பை என் கூட இருந்தவர்களிடம் கூட நான் சொல்லவில்லை. அரசியல் நாகரிகம் கருதி சொல்லாமல் இருந்து வந்தேன். இப்போது, அதனை தேவையில்லாமல் வெளியில் சொல்லி, கீழ்த்தரமான அரசியலில் தினகரன் ஈடுபட்டுள்ளார். 

தினகரன் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் தங்கதமிழ்ச்செல்வனை பேட்டி அளிக்க சொல்லி இருக்கிறார். 4 நாட்களுக்கு முன்னதாக பா.ஜ., உடன் ஓபிஎஸ் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக தினகரன் கூறியிருந்தார். உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறுவதன் மூலம், தினகரன் குழப்பமான மனநிலையில் உள்ளது தெரிகிறது. 

நல்ல குடும்பத்தில் பிறந்த நான் விசுவாசமாக அரசியல் வாழ்வை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டை காட்டி ஓட்டு வாங்கி தில்லுமுல்லு செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர் தினகரன். திருப்பரங்குன்றத்தில் அதிமுக தொண்டர்களின் எழுச்சியைப் பார்த்து தினகரனுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. கதிர்காமு எம்எல்ஏ-விடம் ரூ.50 கோடி தந்து என் பக்கம் வந்துவிட கூறியதாக டிடிவி பொய் சொல்கிறார்.

அணிகள்  இணைந்த பிறகு தினகரனுடன் எனக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. எங்கள் சந்திப்பில் ரகசியம் இருப்பதாக தினகரன் கூறுகிறார். அவர் ரகசியத்தை வெளியிடட்டும். அதற்கு பதில் என்னிடம் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

OPS Explanation about TTV’s charges