நாடாளுமன்ற தேர்தல் 8-ந் தேதி அறிவிக்க வாய்ப்பு?..

2014–ம் ஆண்டு நடைபெற்ற 16–வது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 26–ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, 17–வது நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னோட்ட பணிகளை இந்திய தேர்தல் கமி‌ஷன் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகளை எந்தவகையில் செய்வது? என்பன தொடர்பாக பல்வேறுகட்ட ஆலோசனைகள் நடத்திமுடிக்கப்பட்டு உள்ளன.

மின்னணு ஓட்டு பதிவு எந்திரங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளின் கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை உள்ளது. வருகிற 6–ந் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அன்றைய தினம் அமாவாசை ஆகும்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, வளர்பிறையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அநேகமாக வருகிற 8–ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக டெல்லியில் தேர்தல் கமி‌ஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.