எடு பெரியார் தடி…!: தலையங்கன்(ம்)

“நான் சொல்லுகிறேன். தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக்கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்து விட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து, அவர்களுக்கு விரோதமாக சற்று  பலிதமாகிறது என்று கண்டால் உடனே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவரை ஒரு பெரியாராலும்  (பெரியவர்களால்) இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டுவைத்துக் கொண்டும் இருக்க மாட்டார்கள்” (1927 குடியரசு, பெரியார் களஞ்சியம் பாகம் 1)

1927 ஆம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த சந்திப்பின் போது, காந்தியடிகளிடம் தந்தை பெரியார் கூறியது இது.

மகாத்மா காந்தி கொல்லப்படுவதற்கு 20 ஆண்டுகள் முன்னதாகவே, இந்துத்துவம் எனும் பேராபத்தையும், அதன் பின்னணியையும் நேரடியாகவே காந்தியிடம் பெரியார் எடுத்துரைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த சந்திப்பின் போது பெரியாரின் நண்பர் ராஜாஜியும் கூடவே இருந்தததுதான் சுவாரஸ்யம். காந்தியும், பெரியாரும் நடத்திய இந்த உரையாடலின் வயது நூற்றாண்டை நெருங்குகிறது. (2027 ஆனால் நூறு ஆண்டுகள்)

90 ஆண்டுகள் ஆகியும், இந்துத்துவ வாதிகளின் வன்மம் குறைந்த பாடில்லை என்பதை விட, அது மேலும் கூர்மை அடைந்திருக்கிறது என்பதுதான் பெரும் வேதனை. அதன் அடையாளம் தான், 19 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்து விட்டோம், எஞ்சிய மாநிலங்களையும் எங்கள் பிடிக்குள் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாக எக்காளமிடும் இந்துத்துவ ஆட்சியாளர்களின் இறுகிய பிடிக்குள், இந்த நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகமே சிக்கித் தவிக்க நேர்ந்திருப்பது.

வெள்ளையர் அமர்ந்திருந்த ஆட்சி பீடத்தில் வர்ணாசிரமத்தை அமர்த்த பாடுபடுகிறீர்கள் என்று காந்தியைப் பார்த்து பெரியார் சொன்னது எத்தனை பெரிய உண்மையாகி விட்டது. 70 ஆண்டுகளாக இப்படியும், அப்படியுமாக அரசியல், சமூக அமைப்புகளுக்குள் ஊடுருவிக் கொண்டிருந்த இந்த்துத்துவம், இப்போது செங்கோட்டை சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டு “எங்கே வா பார்க்கலாம்” என்று அதிகாரம் செய்துவருகிறது.

19 மாநிலங்கள் படுத்து விட்டன. ஏனைய மாநிலங்களோ எப்போது  படுக்கும் என்று தெரியவில்லை. தமிழகம் மட்டும் பெரியார் விதைத்துச் சென்ற மான  உணர்ச்சி காரணமாக தனித்து நிற்கப்பார்க்கிறது. ஆம். முன்னெப்போதையும் விட தமிழகத்திற்கு இப்போதுதான் பெரியார் பெரிதும் தேவைப்படுகிறார்.

வளர்ச்சி என்றும், வலிமை என்றும் வாய் ஜாலம் பேசி தமிழகத்தை வளைக்கக் காத்திருக்கும் அந்தக் கூட்டத்தை விரட்டியடிக்கும் வலிமை பெரியார் கைத்தடிக்கு மட்டுமே உண்டு.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாளை ஒட்டி சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரளுவோம் என்ற பிரகடனத்தை, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திரண்ட திராவிடர் கழகம், காங்கிரஸ், இடதுசாரி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள் உரத்த குரலில் பிரகடனம் செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கு இடையேயும், எத்தனையோ கொள்கை முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால், பெரியார் சொன்ன பேதமொழிப்பிலும், மதவாத எதிர்ப்பிலும் ஓரணியில் நிற்வர்கள், நிற்க முடிந்தவர்கள் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அந்தக் கூட்டத்தில் சொன்னதைப் போல, தக்க தருணத்தில் மதவாதத்திற்கு எதிராக இந்தத் தலைவர்கள் திரண்டிருக்கிறார்கள். மதவாத எதிர்ப்பிற்கு பெரியாரை விட்டால் வேறு யாரைத் துணைக் கொள்ள முடியும்? எனவே, தந்தை பெரியாரின் இந்த நினைவு நாளி்ல், மதவாதத்திற்கு எதிராக அணி திரள்வோம் என்ற சூளுரையை  மீண்டும் அந்தத் தலைவர்கள் உறுதி செய்து கொள்ளட்டும். “எடு பெரியார் தடி” என்ற முழக்கத்துடன் மதச்சார்பின்மையை நிலைநாட்ட மான உணர்வுடன் பீடு நடை போடட்டும்!

 

Periyar must need nowadays