பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை என்று கயவர்கள் புரிந்து கொள்ளட்டும்: கி.வீரமணி

பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை என்று கயவர்கள் புரிந்து கொள்ளட்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அறந்தாங்கியில் பெரியார் சிலை நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது.

பாஜகவினரின் தேர்தல் தோல்வி பயம் உச்சகட்டத்தை அடைந்ததால், குழம்பிப்போய் இத்தகைய இழி செயல்களை இந்த இழி மக்கள் செய்கின்றனர்.

எல்லா ஊர்களிலும் உள்ள பெரியார் சிலைகளையும் இதுபோல தேர்தலுக்கு முன்பே உடைத்து ‘திருப்பணி’ ஆற்றட்டும்.

ஏற்கெனவே நோட்டாவை விட கீழே வாக்கு வாங்கிய பாஜகவினர் அடியோடு படுதோல்வியைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

பெரியாரைப் பொறுத்தவரை 1971 தேர்தலில் திண்டுக்கல் போன்ற ஊர்களில் அவர் சிலையைத் தகர்க்க, படத்தை எரிக்க பாஜக – ஆர்எஸ்எஸ் முயற்சித்த போது பெரியார் அறிக்கை விட்டார். அதில், ‘நானே என் படத்தை அச்சிட்டு வழங்குகிறேன்; கொளுத்துங்க’ என்று கூறி 1971 தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தவர் பெரியார்.

திராவிடத் தமிழ் இனத்தை ஒன்று திரட்ட இத்தகைய இழிவானவர்களின் இழி செயல்கள், ‘வயல்களில் பயிர் வளர’ நல்ல உரங்களாகவே பயன்படும்.

அதிமுக ஆட்சி என்பது, மோடி ஆட்சியிடம் தமிழ்நாட்டை, தமிழர் நலனை, உரிமைகளை அடகு வைத்துவிட்டது; இத்தகைய ஆட்சியில் இந்தத் ‘துணிச்சல்’ வந்திருக்கிறது.

அதிமுகவினருக்கு பெரியார் சிலை உடைபடும்போது உணர்வு ஏற்படவில்லை – ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்க இயலாத பாஜக அடிமை ஆட்சியாக மாறிவிட்டது.

திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறது; அண்ணாவுக்கு ஒரு தேர்தல் வியாபார முத்திரை – அவ்வளவுதான்.

பெரியாரை அவமதித்தோரைக் காப்பாற்றும் துரோக வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்குப் பாடம் கற்பிக்க சரியான ஒரே வழி – ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற – சட்டப்பேரவை வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வதுதான்.

இன்றைய நிலையில் பெரியாரின் அறிவுரை இதுவாகத்தான் இருக்கும். இருக்கவும் வேண்டும்.

பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை!

‘எங்களுக்கு உயிர் வெல்லம் அல்ல; உயிர்த் தியாகமும் தேவை என்றால் தருவதற்குத் தயார். பெரியாரின் ராணுவம்’ – எதிரிகள் புரிந்துகொள்ளட்டும்!

பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை என்று கயவர்கள் புரிந்து கொள்ளட்டும்” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.