பிரதமர் மோடி ‘வாக்காளர்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார் ’: மன்மோகன் சிங் ..

2014-ம் ஆண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் மோடி வாக்காளர்களிடம் தோற்று,

அவர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.சசி தரூரின் தி பாரடாக்சியல் பிரைம் மினிஸ்டர் என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடந்தது.

இதில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:

2014-ம்ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிக்கு வரும்போது, மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக மோடியும், அவரின் அரசும் வாக்காளர்களிடம் தோல்வி அடைந்து, அவர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.

இந்தியர்கள் அனைவருக்குமான பிரதமர் நான் என்று மோடி பேசுகிறார். ஆனால் நாட்டில் பரவலாக நடக்கும் வகுப்புவாத வன்முறை, பசு குண்டர்களால் நடக்கும் வன்முறை, கும்பல் வன்முறை ஆகியவற்றைக் கண்டும், கேட்டும் பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காமல் மவுனமாகவே இருக்கிறார்.

நம்முடைய பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் சூழல் சிபிஐ அமைப்பு போல் அதன் தரத்தை இழந்துவிட்டன.

இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.