காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு (வீடியோ)

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

விளைநிலங்களுக்கு உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்  நடத்தி கைது செய்யப்பட்ட விவசாயிகளை திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கமணி உடன்  நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நேற்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

அனுமதியின்றி காத்திருப்பு போராட்டம் நடத்தியதாக  திருப்பூர், திருவாரூர், தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல் துறையினர் நேற்று இரவு கைது செய்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அவர்களை நேரில் சந்தித்து இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து இன்று சட்டப்பேரவையில் குரல் எழுப்பப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.