‘புதுமைப்பெண் திட்டத்தை’ தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டத்தை’ தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
“மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அதை வழங்குவதை அரசு தன் கடமையாக நினைக்கிறது. பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிடும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், கல்லூரியில் நுழைகிறார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் தமிழக அரசு சார்பில், புதுமைப்பெண் மற்றும் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்காக கல்லூரிகளில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ” என் அழைப்பை ஏற்று, இந்த விழாவில் கலந்துகொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி, உயர் கல்வியில் மாபெரும் பாய்ச்சலாக அமையப்போகிற திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரக்கூடிய அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகத்தான திட்டம் இந்தத் திட்டம்.

15 மாதிரிப்பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. என்னுடைய வாழ்வில் மகிழ்ச்சியான் நான் இன்று. எந்த விதமான பாகுபாடுமின்றி கல்வி எனும் நீரோடை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நூறாண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பது இதுதான்.உயர்ந்த சாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும். அதிலும் ஆண்கள் மட்டும்தான் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அத்தகைய காலத்தில் இடஒதுக்கீட்டை உருவாக்கி, பள்ளிகளையும் உருவாக்கியது நீதிக்கட்சிதான். அந்த சமூக நீதியை அரசியல் ரீதியாக காப்பாற்றியவர் தந்தை பெரியார். ஆட்சி ரீதியாக காப்பாற்றியவர்கள் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். இவர்களின் வழித்தடத்தில் நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்திருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான பெண்கள் இன்று கல்லூரியில் படிப்பது திராவிட இயக்க பெண்ணுரிமைப் போராட்டங்களால் விளைந்த பயன். மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அதை வழங்குவதை அரசு தன் கடமையாக நினைக்கிறது. பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிடும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், கல்லூரியில் நுழைகிறார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும்.

படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும், அறிவுத்திறன் கூடும். திறைமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தைத் திருமணங்கள் குறையும், பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். பெண்கள் சொந்தக் காலில் நிற்பார்கள்” என்று அவர் பேசினார்.