முக்கிய செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்., புகார் வெட்கக்கேடானது: நிர்மலா சீதாராமன் கண்டனம்…


ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கூறும் புகார்கள் வெட்கக்கேடானவை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் பேசப்பட்ட விலையை விட தற்போது கூடுதல் விலை கொடுத்து வாங்கப்படுவதாகவும், ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் புகார் கூறியது.
ஒரு தொழிலதிபர் பயனடைவதற்காக ரபேல் ரக போர் விமான பேர ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி மாற்றம் செய்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.
இதுகுறித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
”ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் எந்த விதிமீறலும் இல்லை. பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதலுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்படையான முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்த காலத்தில் ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் எதுவும் செய்யப்பட வில்லை. இந்த ஒப்பந்தம் தொடர்பான காங்கிரஸின் புகார் வெட்கக்கேடானது” எனக் கூறினார்.