ரபேல் விவகாரத்தில் உண்மைதன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் : சத்ருகன் சின்ஹா ..

இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல்,

விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்தத்தால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே நேற்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது கருத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பீகாரை சேர்ந்த பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா, ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ரபேல் பேரம் விவகாரம் தொடர்பான பிரச்னையில் உண்மை நிலையை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர்.

அதன்மூலம் ரபேல் போர் விமானத்தின் விலை மூன்று மடங்கு கூடுதலாக வாங்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் இருந்து நீங்கள் (பிரதமர் மோடி) வெளிவருவதற்கு நீண்ட நாள்களாகும்.

மக்கள் என்னை புரட்சிகரமான எம்.பி. என அழைக்கிறார்கள். ஆனால், நான் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காகவே பேசி வருகிறேன்.

எனவே, ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ள நாடு ஆவலாக இருக்கிறது என வலியுறுத்தியுள்ளார்.