7 பேர் விடுதலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்போம்: ராகுல்காந்தி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை ஏற்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதன்படி ராகுல் காந்தி இன்று பிற்பகல் குமரி மாவட்டம் வருகிறார். பின்னர் திமுக – காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடக்கி வைத்து நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறுகின்ற இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கின்றனர்.

இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை சென்னை வந்த ராகுல்காந்தி சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற ‘மாற்றம் கொண்டுவருவோர்’, ஆயிரம் மைல் தூரப் பயணம் உன் காலடியில் தொடங்குகிறது என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். தொடர்ந்து சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ராகுல் காந்தி கூறியதாவது:

செய்தியாளர்களை சந்திப்பதை பிரதமர் மோடி விரும்புவதில்லை, யார் பிரதமர் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு, குறு தொழில்கள் பாதிப்பு அடைந்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி மீது மத்திய அரசு அடக்குமுறையை கையாள்கிறது. விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது. நாடு முழுவதும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சிப்போம்.

விவசாயிகளின் கடன்கள் ஆட்சிக்கு வந்த உடன் தள்ளுபடி செய்யப்படும். நாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.  ஜி.எஸ்.டி வரி சீரமைக்கப்படும் . ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் மீது தனிப்பட்ட கோபங்கள் எதுவும் இல்லை. நீதிமன்றம் சொல்வதை ஏற்போம். மத்திய பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளது . பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியும். சிறு, நடுத்தர தொழில்துறையை முன்னேற்றுவதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்க திட்டமிட்டுள்ளோம், வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான திட்டங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இந்த தேர்தலில் முக்கிய பிரச்சனையே இளைஞர்கள் வேலையின்மையால் தவிப்பதுதான். விவசாயிகளும் விவசாயமும் இல்லாத நாடு வலிமையானதாக இருக்காது.

இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார்.