ரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி …

விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னோடி தேசமாக விளங்கிவருகிறது ரஷ்யா.

விண்வெளிக்கு முதன்முதலில் மனிதனையும் செயற்கைக்கோளையும் அனுப்பிவைத்த ரஷ்யா, தனது விண்வெளிச் சாதனைகளின் வரலாற்றை விளக்கும் முதல் விண்வெளி அருங்காட்சியகத்தை 46 ஆண்டுகளுக்கு முன்பே செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரத்தில் நிறுவியது.

தற்போது ரஷ்யாவில் பத்துக்கும் அதிகமான விண்வெளி மியூசியங்கள் உள்ளன. அவற்றில், விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தில் ரஷ்யா அடைந்துவரும் படிநிலை வளர்ச்சிகள் வியப்பூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றைக் காண விரும்பும் தமிழக மாணவர்களுக்கு அனுமதி கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கான ரஷ்யக் கலாச்சார தூதரகத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவரும் இந்திய – ரஷ்ய வர்த்தக சபைக்கும் (INDO RUSSIAN CHAMBER OF COMMERCE & INDUSTRIES),

ரஷ்ய நாட்டின் விண்வெளி வீரர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்களை ஒருங்கிணைத்துவரும் – தொழில்கள் மற்றும் விண்வெளிச் செயல்பாட்டாளர்களின் சர்வதேச சங்கத்துக்கும் இடையே (Industries And The International Association Of Space Activities Participants) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து 56 பள்ளி மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள் ஒரு பத்திரிகையாளர் அடங்கிய குழுவினருக்கு விண்வெளிக் கல்விச் சுற்றுலாவுக்கான அனுமதியை வழங்கியது ரஷ்யக் குடியரசு.

விண்வெளி நினைவுகள்

ரஷ்யாவுக்கான இந்தக் கல்விச் சுற்றுலாவில் சென்னையைச் சேர்ந்த வேலம்மாள் பள்ளியின் மாணவ, மாணவியர் பங்குபெற்றனர்.

கல்விச் சுற்றுலா குழு, விமானம் மூலம் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவை அடைந்தபின் அங்கிருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் நகருக்குப் பயணித்தது.

அங்கே, பேரரசன் முதலாம் பீட்டரால் 17-ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட கோட்டையானது, தற்போது மாநில அருங்காட்சியமாக விளங்கி வருகிறது.

அதன் ஒருபகுதியாக, சோவியத் அரசால் நிறுவப்பட்டிருக்கும் ‘காஸ்மோநாடிக்ஸ் அண்ட் ராக்கெட் டெக்னாஜி மியூசிய’த்தை (Museum of Cosmonautics and Rocket Technology) மாணவர்கள் கண்டு களித்தனர்.

இங்கே, புகழ்பெற்ற ரஷ்யப் பொறியாளர் வி.பி.குளுசோவ் வடிவமைத்த ராக்கெட் இன்ஜின்களின் அசல் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.

இவை, சோவியத் ரஷ்யாவின் தொடக்க கால விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டவை. இவற்றுடன், விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் சென்று,

பின்னர் பூமிக்குத் திரும்பிவந்த ‘ரீஎண்ட்ரி கேப்சூல்கள்’, முன்னாள் சோவியத் விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய விண்வெளி உடைகள்,

வானில் மிதந்துகொண்டிருக்கும் ரஷ்யாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 161 நாட்கள் பறந்த ரஷ்யக் கொடி உட்பட, அபூர்மான பொருட்களும் மாடல்களும் அக்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததை மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கண்டு, கேட்டு அறிந்தனர்.

முத்தாய்ப்பாக அந்த அருங்காட்சியகத்தில் மாணவர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடினார் ரஷ்ய விண்வெளி வீரர்கள் கழகத்தின் துணைத் தலைவரும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் தேர்வுக்குழுவில் பணியாற்றியவருமான முஷ்கின் அல்யேக் பெட்ரோவிச்.

விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொண்டதில் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பின் தருணங்களை நினைவுகூர்ந்து பேசிய அவர்,

தற்கால விண்வெளி அறிவியல் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மேலும், ரஷ்ய விண்வெளி மியூசியங்களைக் காண வருகை தந்த தமிழக மாணவர்களைக் கௌரவிக்கும்விதமாக, சுற்றுலாக் குழுவில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.