பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது: சமூக பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..

பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிறந்தநாள் அன்றும் பள்ளி மாணவர்கள் சீருடையில்தான் வரவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கம்மல், செயின், காப்பு போன்றவை அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது அவ்வப்போது செய்தியாகி வருகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் ஜாதியை அடையாளப்படுத்துவதாகவும், அதன் மூலம் பல ஜாதி குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்தின் போதும் அனைவரோடும் கலந்து பழகாத சூழல் நிலவுவதாக தெரியவந்துள்ளது.

எனவே மாணவர்களின் நலனை கருதி, ஜாதியை வெளிப்படுத்தும் கயிறு அணிவதை தடுக்கும் நோக்கத்தில் பள்ளி மாணவர்கள் இனி கைகளில் கயிறு கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டக் கூடாது, கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிய தடை, பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சமூக பாதுகாப்புத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.