வெட்கக்கேடான செயல்; குழந்தை புகைப்படத்தை பகிராதீர்கள்: சித்தார்த் …

கோவை சிறுமி கொலை செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் சித்தார்த்.

கோவை துடியலூர் பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன் புதூரை சேர்ந்தவரின் 7 வயது மகள் கடந்த 25-ம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானார். மறுநாள் காலை சிறுமி சடலமாக மீட்கப் பட்டார்.

பிரேத பரிசோதனையின் போது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது.

இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக துப்புக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று போலீஸார் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அதிர்ச்சியைத் தந்த சோகம். கோயமுத்தூரில் பெண் குழந்தையின் பலாத்காரம் மற்றும் கொலை, நாம் இன்னும் நாகரீகமடைந்த சமூகம்தானா என்பதை யோசிக்க வைக்கிறது.

அந்தக் குழந்தையின் எந்த புகைப்படத்தையும் தயவு செய்து சமூக ஊடகத்தில் பகிராதீர்கள். அந்தக் குடும்பம் அவர்கள் துயரத்தை அனுசரிக்க நாம் இடம் கொடுக்க வேண்டும்.

இந்தச் செயலைச் செய்த மிருகங்களின் பெயர்கள் வெளியே வர வேண்டும். வெட்கக்கேடான செயல்.

இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.