முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுக்க ஏப்.7 முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அமல்…

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,202-ஆக அதிகரித்துள்ளது.

10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2.13 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

சிங்கப்பூரையும் விட்டு வைக்காத கொரோனா தனது கோர முகத்தை அங்கையும் காட்டி வருகிறது.

சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டி உள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினந்தோறும் வைரஸ் நோய் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நேற்றைய முன்தினம் புதிதாக 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 7 பேர் இந்தியர்கள். இவர்களில் 54 பேர் உள்ளூர்வாசிகள் எனவும் யாரும் வெளிநாடுசென்று வரவில்லை எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியோர்களை காண பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. 245 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

457 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் 7 முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

. ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகள், பொருளாதார துறைகளுக்கு விதிவிலக்கு என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கொவிட்-19 சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் என்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொடங்கியதிலிருந்து அந்த நெருக்கடியை நாம் அமைதியாகவும் முறையாகவும் முன்கூட்டியே திட்டமிட்டு, நிலைமை மாறும்போது அதற்கேற்ப நடவடிக்கைகளை மாற்றி சரிசெய்து கையாளுகிறோம்,” என்று அந்தப் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் உரையை தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் வழியாகவும் பிரதமரின் ஃபேஸ்புக் பக்கம் வழியாகவும் மக்கள் கேட்கலாம்.