இனி …தைவானை ‘நாடு’ என்று குறிப்பிடக்கூடாது: இந்திய ஊடகங்களுக்கு சீனா மின்னஞ்சல்…

தைவானின் தேசிய தினம் நாளை (அக்டோபர் 10) அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக தைவான் அரசாங்கம் அளித்த விளம்பரங்களைப் பிரசுரித்த இந்திய செய்தி நிறுவனங்களிடம், ‘ஒரே – சீனா’ என்ற கொள்கையைப் பின்பற்றுமாறு சீனா கேட்டுக்கொண்டுள்ளது

தைவானின் தேசிய தினம் நாளை (அக்டோபர் 10) அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக தைவான் அரசாங்கம் அளித்த விளம்பரங்களைப் பிரசுரித்த இந்திய செய்தி நிறுவனங்களிடம், ‘ஒரே – சீனா’ என்ற கொள்கையைப் பின்பற்றுமாறு சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
தைவான் அதிபர் சாய் இங் வென்னின் புகைப்படத்தைத் தாங்கிய அந்த விளம்பரம், இந்தியாவைப் பாராட்டியிருந்தது.

இமாலய எல்லைப் பகுதியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அண்மையில் சச்சரவு நிகழ்ந்திருக்கும் வேளையில் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம் சீனாவை சினமூட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் சீனத் தூதரகம் கடந்த புதன்கிழமை இரவு ராய்ட்டர்ஸ் உட்பட இந்தியாவின் செய்தியாளர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தது.

அந்த மின்னஞ்சலில், “உலகில் ஒரே சீனாதான் இருக்கிறது. சீன மக்கள் குடியரசுதான் சீனா முழுமையையும் பிரதிநிதிக்கும்,” என்று குறிப்பிட்டிருந்தது.

“குறிப்பாக, தைவானை ஒரு நாடு என்று குறிப்பிடக்கூடாது. சீனாவின் அங்கமான தைவானின் தலைவரை ‘அதிபர்’ என்று குறிப்பிடக்கூடாது,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசஃப் வு இந்த மின்னஞ்சல் குறித்து வெளியிட்ட தமது டுவிட்டர் பதிவில் இந்தியாவைப் பாராட்டியும் சீனாவை ஏளனம் செய்தும் கருத்து தெரிவித்திருந்தார்.

தைவானுக்கும் இந்தியாவுக்கும் அரசதந்திர உறவு இல்லாதபோதும், இருதரப்பும் வர்த்தக, கலாசார பிணைப்பை கொண்டுள்ளன.

“சீன அரசாங்கம் வளர்ந்துவரும் பெரும் சக்தியைப்போல இல்லாமல், தெரு ரவுடி போல நடந்துகொள்கிறது. அது எங்களை மிரட்டுகிறது,” என்று ஒரு தற்காப்பு மறும் பாதுகாப்பு இணையத் தளத்தின் ஆசிரியர் நிதின் கோகலே கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.